புதுடெல்லி,
தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என இந்தியா கூட்டணி சார்பில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில், கடந்த 1ஆம் தேதி டெல்லியில் பெரும் பேரணியை இந்தியா கூட்டணி நடத்தியது.
அதே சமயம், ‘ஜனநாயகம் காப்போம்; அராஜகம் ஒழிப்போம்’ எனும் பேரணியை பாஜக முன்னெடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக இன்று அரியானா மாநிலத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் ‘ஜனநாயகம் காப்போம்; அராஜகம் ஒழிப்போம்’ பேரணி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா,
பிரதமரை விவாதிக்க அழைப்புவிடுத்திருந்த ராகுல் காந்திக்கு பதில் கொடுத்து, எஸ்.ஐ.ஆர். குறித்து விவாதிக்க தயார் எனவும் ஆனால், “பதில்களை எதிர்கொள்ள முடியாமல் ஓடிவிடுவீர்கள்” எனவும் காட்டமாக விமர்சித்துள்ளார்.
மேலும் "நீங்கள் (ராகுல் காந்தி) ஒரு பொறுப்பான விவாதத்தில் ஈடுபட விரும்பினால், நாடாளுமன்றத்திற்குள் வந்து விவாதியுங்கள். நேருக்கு நேர் சந்திப்போம்! ஆனால், கிடைக்கப்போகும் பதில்களை உங்களால் எதிர்கொள்ள முடியாது. எப்போதும் போல, நீங்கள் அங்கிருந்து ஓடிவிடுவீர்கள்.
விவாதம் நடத்த ராகுலுக்கு விருப்பம் என்றால் ஒரு கடிதம் எழுதட்டும்; சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட நாங்கள் தயார். பிரதமர் மோடியுடன் ராகுல் விவாதிக்கத் தேவையில்லை; நாடாளுமன்றத்தில் விவாதம் செய்யலாம் .
80 ஆண்டுகள் பழமையான ஒரு ஜனநாயக நாடு, உங்கள் ஏமாற்று வேலைகளுக்கு ஏமாந்துவிடும் என்று நீங்கள் உண்மையிலேயே நம்புகிறீர்களா? நாங்கள் மக்கள் மத்தியில் களப்பணியாற்றுபவர்கள். நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும், நமது கிராமங்களிலும், வயல்வெளிகளிலும் பாரதிய ஜனதா கட்சி உங்களுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கும்.
நீங்கள் மக்களைத் திரட்ட முயன்றால், அங்கும் பாஜக தொண்டர்கள் உங்களுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கக் காத்திருப்பார்கள். 'ஜனநாயகத்தைக் காப்போம், அராஜகத்தை ஒழிப்போம்' என்ற இந்த பேரணி, ராகுல் காந்திக்கு ஒரு வலுவான மற்றும் உறுதியான பதிலடியை வழங்கியுள்ளது என்று கூறினார்.
பல்வேறு பிரச்சினைகள் குறித்து பொதுவெளியில் தன்னுடன் விவாதிக்க பிரதமர் மோடி தயாரா என காங். மூத்த தலைவர் ராகுல் காந்தி சவால்விட்ட நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பதில் அளித்துள்ளார்.