புதுடெல்லி
இந்திய நாடாளுமன்றம் பொதுவாக ஆண்டுக்கு 3 முறை கூடுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர் மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் என 3 முறை நடைபெறும் இந்த கூட்டங்களில் நல்லாட்சியை உறுதி செய்வதற்கான சட்டமியற்றல், நாட்டுக்கான வளர்ச்சி திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் என பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன.
இதில் ஆண்டின் முதல் கூட்டமான பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. ஜனாதிபதி உரையுடன் தொடங்கும் இந்த கூட்டத்தில், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
அந்தவகையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகியது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் காலையில் தொடங்கும் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார்.முன்னதாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றுவதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சம்பிரதாய முறைப்படி புறப்பட்டார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குதிரைப்படை அணிவகுப்பு நாடாளுமன்றம் அழைத்துவரப்பட்டார்.
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி பேசும் போது கூறியதாவது:-
சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் பங்காற்றிய தலைவர்களை நான் மரியாதையுடன் நினைவுகூருகிறேன் .
தங்கள் கடமைகளுக்கு முன்னுரிமை அளித்து இந்தியாவின் உரிமைகளைப் பெற உதவிய லட்சக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நான் தலைவணங்குகிறேன்.
நாட்டின் பாதுகாப்பான எதிர்காலத்திற்கு கடந்த காலத்தை நினைவில் வைத்துக் கொள்வதும், அதிலிருந்து கற்றுக்கொள்வதும் மிகவும் முக்கியம் என எனது அரசு நம்புகிறது.
ஏழைகளுக்கு விரைவில் மருத்துவ வசதி கிடைக்க ஆயுஷ்மான் உதவியுள்ளது.
இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் முதல் பாரம்பரிய மருத்துவ மையம் அமைய உள்ளது.
கொரோனா காரணமாக பல உயிர்கள் பலியாகியுள்ளன. இதுபோன்ற சூழ்நிலைகளிலும் நமது மத்திய , மாநில, மருத்துவர்கள், செவிலியர்கள், விஞ்ஞானிகள், நமது சுகாதாரப் பணியாளர்கள் குழுவாகப் பணியாற்றினர். நமது சுகாதார மற்றும் முன்னணி ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவின் திறன் தடுப்பூசி திட்டத்தில் தெளிவாகத் தெரிந்தது. ஒரு வருடத்திற்குள், 150 கோடி டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி சாதனை படைத்துள்ளோம். இன்று, அதிகபட்ச அளவு மருந்துகளை வழங்குவதில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இருக்கிறோம்.கொரோனா தடுப்பூசி இயக்கம் நாடு முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என கூறினார்.