பெங்களூரு,
கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் முதல் வாரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி புதிய கர்நாடகத்தை உருவாக்கும் பொருட்டு பரிவர்த்தனா யாத்திரை என்ற பெயரில் சுற்றுப்பயணத்தை கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 2-ந் தேதி பெங்களூருவில் தொடங்கினார்.
அவர் மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்தார். இந்த பயணத்தின் நிறைவு நாள் விழா பொதுக்கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில் கூறியதாவது:-
சொந்த நலன்
கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு தற்போது ஆட்சியில் இருந்து வெளியேறும் வாசலில் நிற்கிறது. அங்கிருந்து முழுமையாக வெளியே செல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை. கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்ததும் மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம்.
மத்தியில் எங்கள் அரசு ஏழைகள், நடுத்தர மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற பாடுபட்டு வருகிறது. அவர்களின் வாழ்க்கையை எளிமையாக்கும் வழிகளை கண்டறிந்து அமல்படுத்தி வருகிறோம். கர்நாடகத்தில் எங்கள் ஆட்சி அமைந்த பிறகு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவோம்.
சிலர் நாட்டின் நலனை விட சொந்த நலனுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நாங்கள் அவ்வாறு இல்லை. நாங்கள் நாட்டு நலனுக்கே பாடுபடுகிறோம். ஊழல் செய்வதில் கர்நாடக காங்கிரஸ் அரசு புதிய சாதனை படைத்துள்ளது.
மத்திய பட்ஜெட்டில் பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்கு ரூ.17 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 160 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய ரெயில் பாதை அமைக்கப்படும். இதில் 80 ரெயில் நிலையங்கள் அமைக் கப்படும். இதில் இயக்கப்படும் ரெயில்களில் தினமும் 15 லட்சம் பேர் பயணம் செய்வார்கள்.
காங்கிரஸ் இல்லாத இந்தியா
நமது நாட்டின் அரசியல், சமூகம் உள்ளிட்டவற்றில் காங்கிரஸ் கலாசாரம் தேவை இல்லை. மொத்தத்தில் காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம். நாட்டை எல்லா வகையிலும் காங்கிரஸ் பாழாக்கிவிட்டது. ஜன்தன் திட்டத்தின் கீழ் ஒரு கோடிக்கும் அதிகமான வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன. தரமான கல்வியை கொடுக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி இருந்தபோது 950 கிலோ மீட்டர் நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது.
நாங்கள் கடந்த 3 ஆண்டுகளில் 1,600 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்து இருக்கிறோம். நாங்கள் புதிதாக 200 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரெயில்வே பாதையை அமைத்துள்ளோம். பாரதமாலா திட்டத்தின் கீழ் நாட்டில் 9 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்க நாங்கள் திட்டமிட்டு உள்ளோம். முத்ரா திட்டத்தின் கீழ் சொந்தமாக தொழில் செய்ய கடன் வழங்குகிறோம். இதனால் நாட்டில் புதிதாக 3 கோடி தொழில்முனைவோர் உருவாகி இருக்கிறார்கள். 2022-ம் ஆண்டுக்குள் ஏழைகளுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.
இவ்வாறு மோடி கூறினார்.