லக்னோ,
இன்றைய காலக்கட்டத்தில் திருமணம், பிறந்த நாள் விழா என எந்த விழாவாக இருந்தாலும் டிஜே மியூசிக் (DJ Music) இல்லாமல் கொண்டாட்டமே இல்லை. காதை பிளக்கும் டிஜே சத்தம் இருந்தால் தான் இந்த விழாக்களே முழுமையடைகின்றன என்ற நிலைக்கு வந்து விட்டோம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இதே நிலைமை தான். ஆனால், இந்த டிஜே-க்களால் வரும் சவுண்ட் தொல்லை ரொம்பவே அதிகம். வயதானவர்கள், சின்னக் குழந்தைகளுக்கு இந்த அதிக சத்தம் பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
இந்த பயங்கர சத்தம் மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் ஆபத்து என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்திருக்கிறது. பொதுவாக திருமண நிகழ்ச்சியில் மாப்பிள்ளை ஊர்வலத்தில் டிஜே எனும் இசைக் கச்சேரி இடம்பெறுவது வழக்கம். இந்நிலையில் உத்தர பிரதேசம் சுல்தான்பூர் மாவட்டம், தரியாபூர் கிராமத்தில் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி ஒரு திருமண ஊர்வலம் டிஜே கச்சேரியுடன் நடைபெற்றது. அதில் கிளம்பிய அளவுக்கு மீறிய சவுண்ட் அங்கு உள்ள ஒரு கோழிப்பண்ணையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
கச்சேரியின் சவுண்டு தாங்காமல் அங்கு இருந்த 140 கோழிகள் இறந்துள்ளது. இது தொடர்பாக தரியாபூர் காவல் நிலையத்தில் கோழிப்பண்ணை உரிமையாளர் சாபீர் அலி, புகார் அளித்தார். இதையடுத்து உயிரிழந்த கோழிகளுக்கான உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டது. இதில் டிஜே இரைச்சல் கோழிகளுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தியதாகவும் இதனால் ஏற்பட்ட மாரடைப்பால் 140 கோழிகள் இறந்ததாகவும் தெரியவந்தது.
இதுகுறித்து உடற்கூறு ஆய்வு நடத்திய தலைமை கால்நடை மருத்துவ அதிகாரி பிரமோத் சர்மா கூறுகையில், “திருமண ஊர்வலத்தின் டிஜே வாகனம் கோழிப்பண்ணையை கடந்து சென்றபோது, அதிலிருந்து வெளியான உரத்த இரைச்சலும் அதிர்வுகளும் அங்கிருந்த கோழிகளைப் பெரிதும் மிரளச் செய்தது. இந்தத் திடீர் பீதி காரணமாக கோழிகள் மிரண்டுபோய், கண் இமைக்கும் நேரத்தில் 140 கோழிகள் பட படவென உயிரிழந்துள்ளன.
மாரடைப்பு காரணமாக உயிரிழந்த கோழிகளுக்கு, உரத்த இரைச்சலும், அதனால் ஏற்பட்ட மன அழுத்தச் சூழலும் தாங்க முடியாமல் போய் உள்ளது. இதுவே கோழிகளின் உயிரிழப்புக்கு ஒரு முக்கியக் காரணமாக அமைந்திருக்கலாம் என்றார்.
இந்த உடற்கூறு ஆய்வறிக்கையின் அடிப்படையில் டிஜே இசைக் கச்சேரி நிர்வாகி கவி யாதவ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வினோதமான இந்தப் புதுவித வழக்கு உ.பி.யில் பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.