தேசிய செய்திகள்

காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி ராணுவ அதிகாரி உள்பட 7 பேர் சாவு

காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ராணுவ அதிகாரி மற்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.

ஸ்ரீநகர்,

ராணுவ முகாம்

காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு நீடித்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது.

கந்தர்பல் மாவட்டத்தின் சோன்மார்க் பகுதியில் ராணுவ முகாம் ஒன்று உள்ளது. ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலையோரத்தில் அமைந்துள்ள இந்த முகாம் அருகே நேற்று காலையில் கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிக்கட்டிகள் ராணுவ முகாமில் விழுந்து முகாமை முற்றிலுமாக மூடின.

ராணுவ அதிகாரி உயிரிழப்பு

இதில் முகாமில் இருந்த ராணுவ அதிகாரி உள்பட 11 வீரர்கள் பனிக்குள் புதைந்தனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் பனிச்சரிவில் சிக்கிய வீரர்களை மீட்கும் பணிகளை உயர் அதிகாரிகள் முடுக்கி விட்டனர். இந்த மீட்புக்குழுவினர் பனிக்கட்டிகளை அகற்றி வீரர்களை மீட்கும் பணியில் இறங்கினர்.

நீண்ட போராட்டத்துக்குப்பின் அவர்கள் பனிக்கட்டிகளுக்கு அடியில் மயங்கிய நிலையில் கிடந்த அனைத்து வீரர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் அந்த ராணுவ அதிகாரி உயிரிழந்தார். மற்ற வீரர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி

இதைப்போல எல்லையோர மாவட்டமான பந்திப்போராவின் துலைல் நகர்ப்பகுதியிலும் பல்வேறு இடங் களில் நேற்று அதிகாலையில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் படூகம் கிராமத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் மெஹ்ராஜுத்தின் (வயது 55) என்பவரின் வீடு முற்றிலும் பனிக்கட்டிகளால் மூடியது.

இந்த பனிச்சரிவில் சிக்கி மெஹ்ராஜுத்தின், அவரது மனைவி, மகன் மற்றும் மகள் ஆகிய 4 பேரும் உயிரிழந்தனர். அவர்களது உடல்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.

மேலும் காஷ்மீரின் வேறு சில பகுதிகளில் ஏற்பட்ட பனிச்சரிவு சம்பவங்களிலும் 2 பேர் உயிரிழந்தனர். இதனால் நேற்று ஒரே நாளில் மட்டும் 7 பேர் பனிச்சரிவில் சிக்கி பலியாகி உள்ளனர்.

விமானங்கள் ரத்து

மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு நீடித்து வருவதால் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமான சேவை முற்றிலும் முடங்கி உள்ளது. அங்கிருந்து புறப்படும் மற்றும் அங்கு வரும் விமானங்கள் அனைத்தும் நேற்று முன்தினம் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலைமை 2-வது நாளாக நேற்றும் நீடித்தது. ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து ஒரு விமானமும் இயக்கப்படவில்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

வானிலை மையம் எச்சரிக்கை

இதற்கிடையே காஷ்மீரில் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த முதல் மிக பலத்த பனிப் பொழிவும், கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இத்துடன் பல இடங்களில் பனிச்சரிவும் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் மலைப்பகுதி மற்றும் அடிவாரங்களில் வசிப்போர் வீட்டை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. மேலும் பனிச்சரிவு சேதங்களை அறிந்து கொள்ள பல மாவட்டங்களில் கட்டுப்பாட்டு அறைகளும் திறக்கப்பட்டு உள்ளன.