கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தின் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உணவு விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளராக இருந்தவர் சஞ்சய் மொண்டல்.
இந்த நிலையில் இவரது உணவு விடுதிக்கு 4 பேர் பிரியாணி சாப்பிட வந்துள்ளனர். சாப்பிட்ட பின் அவர்களிடம் ஒரு தட்டு பிரியாணிக்கு உரிய ரூ.190 பணம் தரும்படி சஞ்சய் கேட்டுள்ளார்.
ஆனால் அவர்கள் பணம் தருவதில் தகராறு செய்துள்ளனர். இதில் வாக்குவாதம் முற்றியதில் 4 பேரில் ஒருவர் துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளார். இந்த சம்பவத்தில் சஞ்சய் காயமடைந்து உள்ளார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபொழுது உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்த சம்பவத்தினை நேரில் கண்ட சஞ்சயின் சகோதரர், பிரோஸ் என்பவர் சண்டையை ஆரம்பித்து பின் துப்பாக்கியால் சுட்டார். அவருடன் ராஜா, மோக்ரி மற்றும் சல்மான் ஆகியோர் இருந்தனர். அவர்கள் அனைவரும் கூலிப்படையினர் என கூறியுள்ளார்.
எனினும், பிரோஸ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ள போலீசார் பிரியாணியுடன் தொடர்புடைய கொலையா? அல்லது வேறு ஏதேனும் உள்நோக்கம் இருக்கிறதா? என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகின்றனர்.