தேசிய செய்திகள்

“ராமர் கற்பனை பாத்திரம் என்றபோது உங்கள் அறிவு எங்கே போனது?” - இந்துத்துவா பற்றி கேள்வி எழுப்பிய ராகுலுக்கு பிரதமர் மோடி பதிலடி

ராமர் கற்பனை பாத்திரம் என்றபோது உங்கள் அறிவு எங்கே போனது என இந்துத்துவா பற்றி கேள்வி எழுப்பிய ராகுலுக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.

தினத்தந்தி

ஜோத்பூர்,

இந்துத்துவா பற்றி கேள்வி எழுப்பிய ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலடி கொடுத்தார். ராமர் கற்பனை பாத்திரம் என சுப்ரீம் கோர்ட்டில் கூறினீர்களே, அப்போது உங்கள் இந்துத்துவா அறிவு எங்கே போனது? என அவர் கேட்டார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளாக ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு வரும் 7-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.

தற்போது அங்கு வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையில் நடைபெறுகிற பாரதீய ஜனதா ஆட்சியை, அந்தக் கட்சி தக்கவைப்பதற்கு போராடி வருகிறது. அதே நேரத்தில் அவரிடம் இருந்து ஆட்சியை பறிப்பதற்கு காங்கிரஸ் கட்சி திட்டம் தீட்டி, உத்தி வகுத்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

இரு கட்சிகளின் பிரசாரத்திலும் அனல் வீசுகிறது.

இந்த நிலையில் ஜி-20 உச்சி மாநாட்டுக்காக அர்ஜென்டினா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் நாடு திரும்பினார்.

அதே சூட்டோடு சூடாக நேற்று அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்தார்.

ஜோத்பூரில் நடந்த கூட்டத்தில் அவர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். அப்போது அவர், பொய்களின் பல்கலைக்கழகம் காங்கிரஸ் கட்சி. ஒருவர் அந்தக் கட்சியில் புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டு வருகிறார். அதற்கான பரிசு அவருக்கு கிடைக்கப்போகிறது என ஆவேசமாக கூறினார்.

மேலும் அவர் பேசும்போது, ராஜஸ்தானைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு 5 ஆண்டிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற பொதுவான கருத்து உள்ளது. எனவேதான் காங்கிரஸ் கட்சி எதுவுமே செய்யாமல்கூட, மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என நம்புகிறது. ஆனால் அது தவறு என்று நிரூபணமாக போகிறது. மறைந்த பைரோன்சிங் ஷெகாவத்துக்கு தொடர்ந்து 2-வது முறை ஆளுகிற வாய்ப்பு வழங்கப்பட்டது என்பதை ராஜஸ்தான் மக்கள் நினைவு கூர்வார்கள் என்று கூறினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் மோடி சாடினார். அப்போது அவர், எங்களிடம் இப்போது இந்துத்துவா பற்றி கேள்வி கேட்கிறீர்களே, சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி, மத்தியில் ஆட்சி செய்தபோதுதானே, ராமசேது பால வழக்கின் விசாரணையில் ராமர் கற்பனை கதாபாத்திரம் என சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தீர்களே, அப்போது இந்த இந்துத்துவா அறிவு எங்கே போனது? என கேள்வி எழுப்பினார்.

இந்துத்துவா பற்றிய எங்கள் அறிவு குறித்தும், அர்ப்பணிப்பு பற்றியும் கேள்வி கேட்கிறீர்களே, இதே காங்கிரஸ் கட்சிதானே நாட்டின் முதல் ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத், சோமநாதர் கோவிலுக்கு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தது? என்றும் அவர் வினவினார்.

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் கடந்த சனிக்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாரதீய ஜனதா கட்சியினரை சாடியபோது, இந்துத்துவாவின் சாரம் என்ன? பிரதமர் மோடி தான் ஒரு இந்து என்கிறார். ஆனால் அவர் இந்து தன்மையின் அடிப்படையை புரிந்துகொள்ளவில்லை. அவர் என்ன மாதிரியான இந்து? என கேட்டார். அதற்கு பிரதமர் மோடி, இப்போது பதிலடி கொடுத்துள்ளார்.

விவசாயிகள் பிரச்சினையை எழுப்பிய பிரதமர் மோடி, நாட்டின் முதல் பிரதமராக சர்தார் வல்லபாய் படேல் வந்திருந்தால், இன்றைக்கு விவசாயிகள் சந்தித்து வருகிற பிரச்சினைகளுக்கு இடம் இருந்திருக்காது. விவசாயத்தை பற்றி அறிந்திராதவர்கள், நாட்டை 4 தலைமுறைகளாக ஆட்சி செய்துவிட்டார்கள். நான் தெளிவாகவே சொல்கிறேன். சட்டையில் ரோஜாப்பூவை குத்திக்கொண்டு வலம் வந்தவர்கள், தோட்டத்தை பற்றிய அறிவை கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் விவசாயத்தை பற்றிய அறிவை கொண்டிருக்கவில்லை என்று சாடினார். இதன் மூலம் நாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேருவை பிரதமர் மோடி, பெயர் குறிப்பிடாமல் சாடியது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்