பெங்களூரு,
தமிழகத்துக்கு காவிரிநீரை திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இது குறித்து நிருபர்களிடம் பேசிய கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, தமிழகத்துக்கு திறந்து விட தண்ணீர் எங்கே இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.
காவிரி வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நேற்று விசாரித்தது. அப்போது தமிழகத்துக்கு 4 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டது.
தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.
இந்தநிலையில் பெங்களூருவில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு குறித்து நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், தண்ணீர் எங்கே இருக்கிறது. (தமிழகத்துக்கு) திறந்து விடுவதற்கு? என கேள்வி எழுப்பினார்.
மேலும், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு பற்றி நான் வக்கீல்களை கலந்து ஆலோசிப்பேன். முழு விவரமும் தெரிய வந்தபிறகு, அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம் என்று குறிப்பிட்டார்.
கர்நாடக நீர்வளத்துறை மந்திரி எம்.பி. பாட்டீல் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி படுகையில் உள்ள 4 அணைகளிலும் தண்ணீர் இருப்பின் அளவு மிக குறைவாக உள்ளது. எனவே (தமிழகத்துக்கு) தண்ணீரை திறந்து விடும் நிலையில் கர்நாடகம் இல்லை. தற்போது உள்ள தண்ணீர் அளவு, நகரங்களின் குடிநீர் தேவையை சந்திப்பதற்கும், சாகுபடி செய்யப்பட்டு உள்ள பயிர்களுக்கும்கூட போதுமானதாக இல்லை.
காவிரி படுகையில் உள்ள அனைத்து அணைகளிலும் 9 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே உள்ளது.
எங்கள் அணைகளில் மிகக் குறைவான தண்ணீர்தான் உள்ளது என்கிற விவரத்தை எங்கள் சட்டக்குழுவினர் மூலம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிப்போம்.
புது தண்ணீரை திறந்து விடும் பருவம், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவுக்கு வந்து விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.