முழு ஊரடங்கு
புதுவையில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதை தொடர்ந்து தொற்று பரவலை கட்டுப்படுத்த புதுவை அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தற்போது நாள்தோறும் இரவு 10 மணிமுதல் மறுநாள் காலை 5 மணிவரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்தநிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணிமுதல் வருகிற 26-ந்தேதி காலை 5 மணிவரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த ஊரடங்கிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. ஊரடங்கின்போது அத்தியாவசிய தேவைகளுக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்தன.
இதைத்தொடர்ந்து கவர்னர் தலைமையில் உயர்மட்டக்குழு கூடி ஒருசில முடிவுகளை எடுத்தது. அதன்படி ஊரடங்கில் சில மாற்றங்கள் (விலக்குகள்) அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக புதுவை அரசு செயலாளர் அசோக்குமார் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
*இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணிமுதல் மறுநாள் காலை 5 மணிவரை தொடரும்.
*வார இறுதி ஊரடங்கு இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணிமுதல் வருகிற 26-ந்தேதி காலை 5 மணிவரை அமலில் இருக்கும். அப்போது ஒரு அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
*அதாவது, உணவு, பழம், மளிகை, காய்கறி கடைகள், பால் பூத்துகள், இறைச்சி, மீன் விற்பனை கடைகள், மருந்துப்பொருள், மருத்துவ உபகரணங்கள் விற்பனை கடைகள் இயங்கலாம்.
*செய்தித்தாள் வினியோகத்துக்கு தடையில்லை.
*ஆஸ்பத்திரிகள், மருத்துவ ஆய்வுக்கூடங்கள், ஆம்புலன்சுகள், மருத்துவம் சார்ந்த பணிகள் நடக்கலாம்.
*சரக்கு போக்குவரத்து, பொதுப்போக்குவரத்து (பஸ், ஆட்டோ, டாக்சி), வேளாண் உற்பத்தி பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு தடையில்லை.
*பெட்ரோல் பங்குகள், வங்கிகள், இன்சூரன்சு அலுவலகங்கள், ஏ.டி.எம்.கள் இயங்கலாம்.
*தொலைத்தோடர்பு, இணையதள சேவை, கேபிள் சேவைகள், மீடியாக்கள், தகவல் தொழில்நுட்ப சேவைகள், குடிநீர் வினியோகம், மின் வினியோகம், தனியார் பாதுகாப்பு சேவைகள், தொழிற்சாலை பாதுகாப்பு ஆகியவற்றுக்கு தடையில்லை.
*கோர்ட்டு, சட்டம் ஒழுங்கு, அவசர தேவைகள், நகராட்சி, தீயணைப்பு, தேர்தல் தொடர்பான பணிகளுக்கு தடையில்லை. உணவுகளை வீடுவீடாக சென்று வினியோகிக்கவும், ஓட்டல்களில் இருந்து எடுத்து செல்லவும் தடையில்லை.
*அரசின் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுபவர்கள் தங்களது அடையாள அட்டையை வைத்திருக்கவேண்டும். பயணங்கள் செல்வோர் அதற்கான டிக்கெட்டுகளை எடுத்து செல்ல வேண்டும்.
*26-ந்தேதி முதல் கடைகள், தொழில், வர்த்தக நிறுவனங்கள் பிற்பகல் 2 மணிவரை மட்டுமே செயல்பட வேண்டும். அதேநேரத்தில் அத்தியாவசிய தேவை கடைகளுக்கு அது பொருந்தாது. ஓட்டல்கள், உணவு விடுதிகள், டீக்கடைகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்கலாம்.
*திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இறுதி ஊர்வலங்களில் 50 பேர் பங்கேற்கலாம். வார இறுதி ஊரடங்கின்போதுகூட இது அனுமதிக்கப்படும்.
*மத விழாக்கள், திருவிழாக்கள் தடை செய்யப்படுகிறது.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.