பாட்னா,
பீகார் மாநிலம் பக்சார் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஆர்த்தி குமாரிக்கு நேற்றைய முன்தினம் திருமணம் நடைபெற இருந்தது. திருமண மேடையில் மணமகனும், மணமகளும் நின்று கொண்டிருந்தனர். உறவினர்கள் திருமண சடங்குகளை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது கூட்டத்திற்குள் புகுந்த நபர் ஒருவர், தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து மணப்பெண் ஆர்த்தியை நோக்கி சுட்டார். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதற்கிடையில் ஆர்த்தியை சுட்ட நபர் அங்கிருந்து தப்பியோடினார்.
வயிற்றில் குண்டு பாய்ந்து வலியால் அலறித்துடித்த ஆர்த்தியை, உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில், ஆர்த்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஆர்த்தியை சுட்ட நபரின் பெயர் தீபந்து என்பது தெரியவந்தது. காதல் விவகாரம் காரணமாக ஆர்த்தி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. தலைமறைவாக இருந்த தீபந்துவை போலீசார் தற்போது கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறனர்.
தீபந்து ஏற்கனவே மதுபான வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்துள்ளார். அவர் ஆர்த்தியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். முன்னதாக கடந்த ஆண்டு ஆர்த்திக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டபோது, தீபந்துவின் மிரட்டலால் மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்தியுள்ளனர்.
அதன் பிறகு கிராம பஞ்சாயத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீபந்துவை கிராமத்தை விட்டு வெளியேற்றியுள்ளனர். ஆனால் தீபந்து மீண்டும் ஆர்த்தியை தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் மீண்டும் ஆர்த்திக்கு திருமண ஏற்பாடுகள் நடந்த நிலையில், திருமண வீட்டிற்குள் புகுந்து ஆர்த்தி மீது தீபந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.
துப்பாக்கியால் சுடப்பட்ட ஆர்த்திக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆர்த்தி உயிருக்காக போராடிக் கொண்டிருக்கும் நிலையில், அவரது தந்தை மற்றொரு கவலையில் ஆழ்ந்துள்ளார். ஆர்த்தியை இன்னொரு நபர் காதலித்து வந்த விஷயம் தங்களுக்கு முன்னரே தெரிந்திருந்தால் இந்த திருமணத்திற்கே சம்மதித்திருக்க மாட்டோம் என மணமகன் வீட்டார் கூறியுள்ளனர்.
திருமண மேடையில் ஆர்த்தி மீது பாய்ந்த குண்டு தங்கள் மகன் மீது பாய்ந்திருந்தால் என்ன ஆகும்? என மணமகனின் பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் ஆர்த்தி உயிர்பிழைத்து வந்தாலும், அவரை இனி யார் திருமணம் செய்து கொள்வார்? என அவரது தந்தை கவலை தெரிவித்துள்ளார். மேலும் தீபந்துவை தனது மகள் ஒருபோதும் விரும்பியது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மணமேடையில் இளம்பெண் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒருபுறம் ஒருதலைக் காதலால் வரும் பிரச்சினை, மறுபுறம் திருமணம் செய்து கொள்ள குடும்பத்தினர் கொடுக்கும் அழுத்தம் என பீகாரில் இளம்பெண்கள் பல இன்னல்கள் சந்தித்து வருவதாக சமூக வலைதளங்களில் பலர் தங்கள் ஆதங்கத்தை பதிவிட்டு வருகின்றனர்.