புதுடெல்லி,
கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் கிடப்பில் போட்டு வருவதாக ஆளும்கட்சியினர் புகார் தெரிவித்து வருகிறார்கள்.
எனவே குறிப்பிட்ட கால வரம்புக்குள் துணை வேந்தர் நியமனம் உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கவர்னருக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்து இருந்தன. இந்த மனுவை நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் விசாரித்தது.
விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், ''மோதல் போக்கால் மாநிலத்துக்கும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. முதல்-அமைச்சரை தேநீர் விருந்துக்கு அழைத்து பேச வேண்டும்'' என்று தமிழக கவர்னரை சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது. மேலும் இந்த வழக்கை நாளை (அதாவது இன்று) விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதன்படி, இந்த வழக்கு நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அரசு மறுபடியும் மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பும் போது மசோதாக்களை கவர்னரால் நிறுத்திவைக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு கவர்னர் தரப்பு: கவர்னர் மசோதாவை திரும்ப அனுப்பினால் அதனை சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றுமனால் அது சட்டமாகிவிடும், பல்கலை. துணை வேந்தர் என்பது ஒரு மிக முக்கிய பொறுப்பு, அதனை அரசு மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என்று கருதுகிறீர்களா?.
நீதிபதிகள்: அரசு என்ன செய்ய முன்வருகிறதோ அது கவர்னருக்கு பிடிக்கவில்லை என்றால் அது அவருடைய சொந்தக் கருத்துதானே?.
கவர்னர் தரப்பு: தமிழ்நாடு அரசு மறைமுகமாக நீதிமன்றத்தின் மூலம் தங்களது மசோதாக்களை சட்டப்பூர்வமக்க கோருகிறார்கள்.
அப்போது குறுக்கீட்ட நீதிபதிகள்: நாங்கள் கேட்பது, அனைத்து மசோதாக்களையும் ஜனாதிபதிக்கு அனுப்பும் வாய்ப்பு இருந்தபோது, ஏன் 2 மட்டும் முதலில் அனுப்பினார்? என்பதைக் கூறுங்கள். கவர்னர் மசோதாக்கள் மீது முடிவு எடுக்காமல் நிறுத்தி வைத்தார் (with hold) என்றால் அது எந்த பிரிவின் படி?, அரசியல் சாசனம் 200 அல்லாமல் வேறு ஏதேனும் விதிமுறை உள்ளதா?. கவர்னர் தனக்கு வேண்டியபடி சுயமாக முடிவு எடுத்துள்ளார்.
எந்த ஆதாரங்களும் ஆவணங்களும் இல்லாமல் மசோதாக்களை நிறுத்தி வைத்ததற்கு ஆதரவாக வாதிடுவதை ஏற்க முடியாது. கவர்னர் ஏன் மசோதாக்களை நிறுத்தி வைத்தார் என்பதை தெரிவிக்க வேண்டும். 10 மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் நிறுத்தி வைத்ததற்கு என்ன காரணம் என்பதை விளக்க வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை நாளை காலைக்கு ஒத்திவைத்தினர்.