கொல்கத்தா
மேற்காசிய மோதல் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெறும் என்றும் அதில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றும் மத்திய அரசு நேற்று அழைப்பு விடுத்திருந்தது. இதன்படி, மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று மாலை அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
இந்நிலையில், இந்த கூட்டத்தில் பங்கேற்காமல் திரிணாமுல் காங்கிரஸ் புறக்கணித்து உள்ளது. இதுபற்றி மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறும்போது, நாடாளுமன்றத்தில் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் பொழுது, அதற்கு பதிலாக தனியாக அரங்கில் அனைத்து கட்சி கூட்டம் நடத்துவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நீங்கள் ஏன் நாடாளுமன்ற கூட்டத்தொடரை தவிர்க்க விரும்புகிறீர்கள்? நாடாளுமன்றமே நீங்கள் பொறுப்பாக பதிலளிக்க வேண்டிய இடம். இது மோசடி என்பதுடன், நாடாளுமன்றத்தின் மதிப்பை வலுவிழக்க செய்யும் என்றும் கூறினார். மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சியினரும் கலந்து கொள்ள முடிவு செய்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பங்கேற்பவர்கள் பற்றிய விவரங்களை தெரிவிக்க அக்கட்சி மறுத்து விட்டது.
மேற்காசிய மோதல் தொடர்பாக இரு அவைகளிலும் பிரதமர் மோடி பேசிய பின்னர், அதுதொடர்பாக விளக்கம் கேட்கவோ அல்லது கேள்வி கேட்கவோ எம்.பி.க்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கான மாநிலங்களவை துணை தலைவர் சகரிகா கோஸ் குற்றச்சாட்டாக கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் நேற்று பேசும்போது, என்னால் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க முடியாது. ஏனென்றால், கேரளாவில் நாளை எனக்கு ஒரு நிகழ்ச்சி உள்ளது என்று கூறினார். எனினும், அனைத்து கட்சி கூட்டம் நடைபெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.