தேசிய செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையில் ஏன் தமிழக அரசு ஆக்சிஜன் தயாரிக்க கூடாது? - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கேள்வி

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஏன் தமிழக அரசு ஆக்சிஜன் தயாரிக்க கூடாது? என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எஸ். ஏ. பாப்டே கேள்வி எழுப்பினார்.

புதுடெல்லி,

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறந்து அங்கு ஆக்சிஜன் தயாரித்து வழங்க அனுமதிக்கும்படி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் இடைக்கால மனு தாக்கல் செய்தது.

அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது ஸ்டெர்லைட் ஆலையை திறந்து அங்கு ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு தரப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், இது தொடர்பாக, பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டதையடுத்து வழக்கு இன்றைக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் இடைக்கால மனு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

தமிழக அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் வைத்தியநாதன், தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனம் மீது உள்ளூர் மக்களிடம் ஒட்டுமொத்தமாக நம்பிக்கையின்மை உள்ளது. அங்கு துப்பாக்கிச்சூடு நடைபெற்று 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். அதை மாவட்ட நிர்வாகம் கையாள்வது மிகவும் கடினமான ஒன்று என்றார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, கொரோனாவால் மக்கள் உயிரிழந்து வரும்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை நிலவி வருவதால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கமுடியாது என தமிழக அரசு கூறுக்கூடாது. இது வேதாந்தா மட்டுமல்ல எந்த நிறுவனமாக இருந்தாலும் சரி... மாநில அரசு இதுபோன்ற வாதங்களை முன்வைக்கக்கூடாது என்றார்.

மேலும், ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசு ஏன் ஆக்சிஜன் தயாரிக்கக்கூடாது? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே எடுத்து நடத்தினாலும் எங்களுக்கு கவலையில்லை. தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நடத்த அதிகாரம் உள்ளது. 1 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கூட மிகவும் முக்கியம் என நீதிபதி தெரிவித்தார்.

மேலும், ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பான விரிவான பிரமான பத்திரம் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு ( ஏப்ரல் 26) ஒத்திவைத்தது.

முன்னதாக, ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்து தூத்துக்குடி ஆட்சியர்

அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் ஆலையை திறக்க பொதுமக்கள் பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.