தேசிய செய்திகள்

டெல்லியில் பரவலாக பெய்த மழை; வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி

செப்டம்பர் 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரையிலான நாட்களில் வானம் தெளிவாக காணப்படும்.

புதுடெல்லி,

டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் இன்று மாலை கனமழை வெளுத்து வாங்கியது. டெல்லி ஐகோர்ட்டு, தெற்கு மோதி பாக், சிவில் லைன்ஸ் மற்றும் நொய்டா செக்டார் 11 உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தபோதும், என்.சி.ஆர். பகுதியை சுற்றியுள்ள இடங்களில் பரவலாக மழை பெய்தது.

வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. இதனால், வெப்ப அலையில் இருந்து தப்பித்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில், டெல்லியில் இன்று முதல் 3 நாட்களுக்கு (19-ந்தேதி வரை) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழை பெய்யும் என தெரிவித்து உள்ளது.

செப்டம்பர் 20-ந்தேதி பகுதியளவு மேகமூட்டத்துடனும், செப்டம்பர் 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரையிலான நாட்களில் வானம் தெளிவாக காணப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.

அடுத்த சில மணிநேரங்களில், கிழக்கு டெல்லி, ஷாதரா, மத்திய டெல்லி, வடக்கு டெல்லி, தெற்கு டெல்லி மற்றும் மேற்கு டெல்லி உள்ளிட்ட டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் இடி மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய கூடும் என்றும் தெரிவித்து உள்ளது.