திருவனந்தபுரம்,
கேரளாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். ஹெலிகாப்டர் மூலம் வெள்ள சேதங்களை பார்த்தப்படியே ஆலப்புழாவில் உள்ள செங்கண்ணூருக்கு சென்றார். அங்குள்ள கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து பேசினார். அவர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். பாதிக்கப்பட்ட மக்கள் வெள்ளத்தால் தாங்கள் அனுபவித்த துயரங்களையும், பாதிப்புகளையும் கண்ணீர் மல்க அவரிடம் தெரிவித்தனர். அதை அவர் மிகுந்த கவனத்துடன் கேட்டுக்கொண்டார்.
பின்னர் ஆலப்புழாவிற்கு சென்றார். அங்கும் முகாம்களில் தங்கியிருப்பவர்களை பார்த்து பேசினார். வெள்ளத்தில் மக்கள் சிக்கியப்போது அவர்களை மீட்பதில் மீனவர்களின் பங்கும் மகத்தானது. 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பத்திரமாக மீட்ட மீனவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா நடைபெற்றது. அதில் கலந்துக்கொண்டு மீனவர்களை பாராட்டினார் ராகுல் காந்தி. கேரளாவில் மழை, வெள்ளம் பாதித்தபோது, முப்படையினர், தேசிய பேரிடர் மீட்புப்படையினருடன் சேர்ந்து மீட்புப்பணியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு எனது பாராட்டுக்கள் அவர்களின் பணிக்கு நான் தலை வணங்குகிறேன் என்று குறிப்பிட்டார்.
ஒகி புயலின்போது கேரள மீனவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாயினர். எனினும் அதில் இருந்து விடுபட்டு, இந்த வெள்ளத்தில் அவர்கள் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். விவசாயிகள் போலவே நாட்டில் மீனவர்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் பாதுகாப்பற்றவர்களாக உள்ளனர். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் மீனவர்களின் நலன்களுக்கு என தனி அமைச்சகம் அமைக்கப்படும். நான் போலி வாக்குறுதிகளை கொடுக்க மாட்டேன். இதை காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் உங்களிடம் சொல்கிறேன் என்றார்.