தேசிய செய்திகள்

நான் ஊழல் செய்ததாக நிரூபித்தால் பகிரங்கமாக தூக்கில் தொங்குவேன்: அபிஷேக் பானர்ஜி

நான் ஊழல் செய்ததாக நிரூபித்தால் பகிரங்கமாக தூக்கில் தொங்குவேன் என்று அமலாக்கப்பிரிவு முன்பு ஆஜராக டெல்லி சென்றுள்ள மம்தா உறவினர் கூறினார்.

தினத்தந்தி

இன்று விசாரணை

மேற்கு வங்காளத்தில் நடந்த நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளன.இந்த வழக்கில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் சகோதரர் மகனும், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவருமான அபிஷேக் பானர்ஜி எம்.பி.க்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. அதனால், அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. டெல்லியில் விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜராகுமாறு கூறியுள்ளது.இந்த விசாரணையில் ஆஜராக டெல்லி செல்வதற்காக, அபிஷேக் பானர்ஜி கொல்கத்தா விமான நிலையத்துக்கு வந்தார்.

அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பழிவாங்கும் நடவடிக்கை

நான் எந்த வகையான விசாரணையையும் சந்திக்க தயார். இது, கொல்கத்தா வழக்காக இருந்தாலும், டெல்லிக்கு வரவழைத்துள்ளனர். மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் தோற்று விட்டதால், பா.ஜனதா பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.விசாரணை அமைப்புகளை தனது அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்துவதை தவிர பா.ஜனதாவுக்கு வேறு வேலை இல்லை.நான் கடந்த நவம்பர் மாதம், பொதுக்கூட்டங்களில் சொன்னதையே மறுபடியும் சொல்கிறேன். நான் 10 காசு சட்டவிரோத பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக எந்த மத்திய அமைப்பாவது நிரூபித்தால், சி.பி.ஐ.யோ, அமலாக்கத்துறையோ விசாரணை நடத்தவே தேவையில்லை.நானே மேடை மீது ஏறி, பகிரங்கமாக தூக்கில் தொங்குவேன்.

விவாதத்துக்கு தயாரா?

நான் பா.ஜனதா தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். கடந்த 5 ஆண்டுகளில் விசாரணை அமைப்புகள் என்ன சாதித்தன என்பது பற்றியோ, மோடி ஆட்சியில் நாட்டின் கதி பற்றியோ என்னுடன் விவாதிக்க வரத்தயாரா?இடம், நாள், நேரத்தை நீங்களே முடிவு செய்யுங்கள். நான் வருகிறேன். விவாதத்தில் பா.ஜனதாவை தோற்கடிக்காவிட்டால், அதன்பிறகு நான் அரசியலில் கால் பாதிக்க மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது