புதுடெல்லி,
மத்திய பிரதேசத்தில் 22 எம்.எல்.ஏ.க்கள் சமீபத்தில் தங்கள் ராஜினாமா கடிதங்களை கவர்னருக்கு அளித்ததை தொடர்ந்து கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. மாநில அரசு பெரும்பான்மையை இழந்துள்ளதால் சட்டசபையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மற்றும் 10 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
கடந்த இரு நாட்களாக நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஹேமந்த் குப்தா ஆகியோர் அமர்வில் இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நேற்று கீழ்க்கண்ட உத்தரவை பிறப்பித்தனர். அவர்கள் கூறியதாவது:-
ஒத்திவைக்கப்பட்ட மத்தியபிரதேச சட்டசபை கூட்டத்தை சபாநாயகர் இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் கூட்ட வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு மட்டுமே ஒரே சபை நடவடிக்கையாக இருக்க வேண்டும். கையை உயரத்தூக்கி தங்கள் ஆதரவு மற்றும் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணிக்குள் முடிவடைய வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, மத்திய பிரதேச சட்டப்பேரவை இன்று பிற்பகல் 2 மணிக்கு கூட உள்ளது. இதற்கு மத்தியில், கமல்நாத் நம்பிக்கை வாக்கெடுப்பு முன்பாகவே ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 22 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால் தற்போது மத்திய பிரதேச சட்ட சபையின் பலம் 208 ஆக குறைந்துள்ளது. பெரும்பான்மைக்கு 104-எம்.எல்.ஏக்களுக்கு மேல் தேவைப்படும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி கட்சிகளையும் சேர்த்து 99 எம்.எல்.ஏக்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. பாஜகவுக்கு 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.