புதுடெல்லி,
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், சக்திசிங் கோலி ஆகியோர் டெல்லியில் நேற்று கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் குஜராத்தில் இறப்பு இரு மடங்காகி உள்ளது. மார்ச் 1-ந் தேதி முதல் கடந்த 10-ந் தேதிவரையில், 1 லட்சத்து 23 ஆயிரம் இறப்பு சான்றிதழ்கள் குஜராத்தில் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டின் இதே காலத்தில் 58 ஆயிரம் இறப்பு சான்றிதழ்கள்தான் தரப்பட்டுள்ளன. 33 மாவட்டங்களில் இருந்து தரவுகள் பெற்று இது சரிபார்க்கப்பட்டது. ஆனால் மாநில அரசு 4,218 பேர்தான் கொரோனாவால் இறந்ததாக கூறுகிறது என்று அவர்கள் கூறினார்கள்.
தொடர்ந்து ப.சிதம்பரம் கூறும்போது, கூடுதலான 65 ஆயிரத்து 805 இறப்பு சான்றிதழ்களுக்கும், கொரோனாவால் நிகழ்ந்ததாக கூறப்படும் 4,218 இறப்புகளுக்கும் உள்ள வித்தியாசம் விளக்கப்பட வேண்டும். இது இயற்கையானது என கூறி விட முடியாது. இதற்கு கொரோனாதான் காரணம். ஆனால் மாநில அரசு கொரோனா இறப்பில் உண்மையான எண்ணிக்கையை மறைக்கிறதோ என்பதில் எங்களுக்கு வலுவான சந்தேகம் உள்ளது.
சில மாநில அரசுகளுடன் சேர்ந்து புதிய நோய்த்தொற்றுகள் மற்றும் கொரோனா பலிகள் தொடர்பான உண்மையான எண்ணிக்கையை மத்திய அரசு மறைக்கிறது என்பதில் எங்களுக்கு வலுவான சந்தேகம் உள்ளது. இது குறித்து மத்திய அரசும், குஜராத் அரசும் நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க ணேடும் என்று அவர் கூறினார்.