தேசிய செய்திகள்

விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து ஆலோசிக்க தயார்: தேவேந்திர பட்னாவிஸ்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து ஆலோசிக்க தயார் என்று தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். #FarmersMarchToMumbai

மும்பை

முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி, விவசாய விளைபொருள்களுக்கு தகுந்த விலை, எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்துதல், ரெயில்வே மற்றும் நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கிஷான் சபா என்ற அமைப்பு நாசிக்கில் இருந்து மும்பைக்கு மராட்டிய பட்ஜெட் கூட்டத்தொடரின் போது சட்டசபையை நோக்கி பிரமாண்ட பேரணி நடத்தப்படும் என அறிவித்து இருந்தது.இதன்படி அந்த அமைப்பு அதிகளவில் விவசாயிகளை திரட்டியது. ஆயிரக்கணக் கான விவசாயிகள் நாசிக்கில் திரண்டார்கள். அவர்கள் கடந்த 6-ந்தேதி நாசிக்கில் இருந்து 180 கி.மீ. தூரமுள்ள மும்பையை நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாத விவசாயிகள் கைகளில் கொடிகளை ஏந்திக்கொண்டு தங்களது கோரிக்கை குறித்த கோஷங்களை எழுப்பியபடி நடைபயணமாக மும்பையை நோக்கி வந்தனர். அவர்களுக்கு மற்ற விவசாய அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து, பேரணியில் கலந்துகொண்டனர். இதில் 35 ஆயிரம் பேர் பங்கேற்று இருப்பதாக கூறப் பட்டது. சட்டசபையை நோக்கிய விவசாயிகளின் இந்த பிரமாண்ட பேரணி மராட்டியத்தின் மற்ற விவசாயிகளையும் இவர்களது பக்கம் திரும்பி பார்க்க வைத்தது. இது மட்டுமின்றி ஒட்டு மொத்த நாட்டு மக்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்து இருக்கிறது. விவசாயிகள் சட்டசபையை நோக்கி பேரணியாக சென்றனர்.இந்த நிலை யில் இரவு கண்ணாப்பட்டி மைதானத்தில் விவசாயிகள் தங்கி ஓய்வு எடுத்தனர்.

இன்று காலை ஆசாத் மைதானம் நோக்கி பேரணி செல்வது என விவசாயிகள் திட்டமிட்டு இருந்தனர். ஆனால், இன்று அம்மாநிலத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்க உள்ளது.காலையில் பேரணி சென்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பதால், நள்ளிரவிலேயே விவசாயிகள் ஆசாத் மைதானம் நோக்கி நடக்க தொடங்கினர். இன்று காலை அவர்கள் மைதானத்தை வந்தடைந்ததும் அவர்களுக்கு உள்ளூர் மக்கள் உணவு, குடிநீர் வழங்கி உதவினர்.

சுமார் 75 ஆயிரம் விவசாயிகள் ஆசாத் மைதானத்தில் இருப்பதாகவும், இன்னும் ரெயில், பஸ் மூலம் அதிகமான விவசாயிகள் வந்து கொண்டிருப்பதாக மாநில கிசான் சங்க தலைவர் தெரிவித்துள்ளார். விவசாயிகள் பெருமளவில் குவிந்துள்ளதையடுத்து, மும்பை மாநகர போலீசார் பலத்த பாதுகாப்பு போட்டுள்ளனர். அரசு தங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை நாங்கள் நகரத்தை விட்டு வெளியேற மாட்டோம் எனவும், சட்ட சபை முற்றுகை போராட்டத்தை முன்னெடுப்போம் என்றும் விவசாய அமைப்புகள் உறுதிபட தெரிவித்தன. இதற்கிடையே, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து ஆலோசிக்க தயாராக இருப்பதாக மராட்டிய முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்