புதுடெல்லி,
மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதீர் ரஞ்சன் சவுத்ரி இன்று லோக்சபாவில் பேசும்போது, விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமனுக்கு விருது வழங்கப்பட வேண்டும், அவரது மீசையை 'தேசிய மீசையாக' அறிவிக்க வேண்டும் என கூறினார்.
கடந்த மே 27ஆம் தேதி இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் விமானத்தை புறமுதுகிட்டு ஓடச் செய்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் எல்லையில் துரதிருஷ்டவசமாக பாராசூட்டில் இறங்கினார். இதனால் பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்டார்.
பாகிஸ்தான் ராணூவ அதிகாரிகளின் கேள்விகளுக்கு வீரமாகவும், விவேகமாகவும் பதிலளித்தார். விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கிய சம்பவம் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது. இதனை அடுத்து இந்தியா மற்றும் மற்ற உலக நாடுகளின் அழுத்தத்தை தொடர்ந்து விமானி அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது.
அபிநந்தனின் வீரம் எவ்வாறு பலருக்கும் பிடித்துபோனதோ, அதனைப்போன்று அவரின் கம்பீர மீசையும் சிறுவர்கள், பெரியவர்கள், இளைஞர்கள், பெண்கள் என பலருக்கும் பிடித்து போய்விட்டது. அபிநந்தன் மீசையால் கவரப்பட்ட இளைஞர்கள் பலரும் அவரைப் போன்று சிங்கம் ஸ்டைலில் கம்பீர மீசை வைத்து வருகின்றனர்.
அபிநந்தன் திருவண்ணாமலை மாவட்டம் திருப்பணவூரை பூர்வீகமாக கொண்டவர். தேசிய பாதுகாப்பு பயிற்சி மையத்தில் பட்டம் பெற்றார். கடந்த 2004-ம் ஆண்டு விமானப்படையில் சேர்ந்தார். 15 ஆண்டுகள் அனுபவம் உள்ள இவர், சுகோய்-30 போர் விமானத்தை கையாள்வதில் சிறந்தவர். விங் கமாண்டராக பதவி உயர்வு பெற்ற இவர் இப்போது மிக் 21 பைசன் ரக போர் விமான ஓட்டியாக உள்ளார். இவரது மனைவி தன்வி மார்வாவும் விமானப்படையில் ஹெலிகாப்டர் விமானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அபிநந்தனின் சகோதரரும் விமானப்படையில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதீர் ரஞ்சன் சவுத்ரி இன்று லோக்சபாவில் பேசும்போது, விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமனுக்கு விருது வழங்கப்பட வேண்டும், அவரது மீசையை 'தேசிய மீசையாக' அறிவிக்க வேண்டும் என கூறினார்.