ஜம்மு,
எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாக கொண்டுள்ளது. பாகிஸ்தானின் இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், பூஞ்ச் பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தானின் இந்த தாக்குதலில் எல்லையோர கிராமத்தில் வசித்து வந்த இந்திய பெண் ஒருவர் பரிதாபமாக பலியானார். இதையடுத்து, இந்திய ராணுவம் கடுமையான பதிலடி கொடுத்ததும் பாகிஸ்தான் தரப்பு துப்பாக்கிச்சூட்டை நிறுத்திக்கொண்டது. கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி கிரிஷ்னகாதி செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய துப்பாக்கிச்சூட்டில் 21 வயது இளைஞர் ஒருவர் பலியாகினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் பாகிஸ்தான் ராணுவம் 285 முறை எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறியுள்ளது.