தேசிய செய்திகள்

வீடியோ: குடிபோதையில் சில்மிஷம் போலீஸ் அதிகாரியை அடித்து உதைத்து நடுரோட்டில் இழுத்து சென்ற பெண்

குடிபோதையில் பெண்ணிடம் தகராறில் ஈடுபட்ட ஓதவ் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டரை அப்பெண் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அகமதாபாத்

குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே உள்ள தக்கர்நகரில் ராஜேந்திர பூங்கா புறவழிச்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சீராக்க சப்-இன்ஸ்பெக்டர் அம்ரித்ஜி அங்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் குடித்துவிட்டு அங்கு பணிக்கு சென்ற அம்ரித்ஜி அங்கு சாலையோரம் காய்கறி வியாபாரம் செய்யும் பெண்ணை சீண்டி அவரிடம் தவறாக நடந்துக் கொள்ள முயற்சித்துள்ளார்.

அந்த பெண் சீருடையில் இருந்த போலீஸ் அதிகாரியை கன்னத்தில் அறைந்து, தரதரவென இழுத்து சென்றார். இதை பார்த்த பொதுமக்கள் அப்பெண்ணை ஊக்குவித்தனர். அப்பெண், காவலர் என்றும் பாராமல் சட்டையை பிடித்து கீழே தள்ளி, 7 முறை கன்னத்தில் விளாசியுள்ளார்.

இந்த சம்பவம் சுமார் 20 நிமிடங்களுக்கு வீடியோவில் பதிவாகியிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிபோதையில் தள்ளாடிக் கொண்டிருந்த காவலரை அப்பெண் தாக்கிய வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் அம்ரித்ஜி கதுஜி என்பவர் மீது காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அம்ரித்ஜியை பாபுநகர் காவல் துறையினர் கைது செய்தனர் அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது அவரை அடித்த பெண்ணை தேடி வருவதாகவும், அவர் அளிக்கும் புகாரின் அடிப்படையில், காவலர் மீது பாலியல் தொடர்பான வழக்குப்பதிவு செய்யவிருப்பதாகவும் மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.