ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் நகரில் 3 நாள் உலக தொழில் முனைவோர் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகளும், ஆலோசகருமான இவாங்கா டிரம்ப் கலந்து கொண்டிருக்கிறார்.
மாநாட்டின் 2வது நாளான நேற்று தொழிலாளர் மேம்பாட்டில் புதுமை என்ற தலைப்பில் ஒரு அமர்வு நடைபெற்றது. இதில் இவாங்கா டிரம்ப் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
நவீன குடும்பங்களை ஆதரிக்கும் கொள்கைகள் நம்பத்தகுந்தவை என்று நான் கருதுகிறேன்.
நவீன தொழிலாளர்களையும், குடும்பங்களில் நவீன யதார்த்தத்தையும் ஆதரிக்கும் வழிகளைப் பற்றி நாம் சிந்திக்க தொடங்க வேண்டும். இதில் தொழில் நுட்பம் மிகப்பெரிய இயக்கியாக இருக்கும் என்று கருதுகிறேன்.
தொழில் நுட்பம், பெண்களுக்கும், பெண் தொழில் முனைவோருக்கும் மகத்தான வாய்ப்புகளை வழங்குகிறது.
தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் ஆணாதிக்கம் செலுத்தப்படுகிற வேலைகளில் பெண்களையும் கூடுதலாக கொண்டு வந்து சமநிலையை உருவாக்க வேண்டும்.
வேலை பார்க்கும் பெண்கள் நிதி ஆதரவைப் பொறுத்தமட்டில் குடும்பத்தின் சொத்தாக திகழ்கிறார்கள். பெண்கள் புதிய வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு தயாராக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.