தேசிய செய்திகள்

கார்கிலில் பாகிஸ்தானின் துரோகத்தை இந்தியா தோற்கடித்தது : பிரதமர் மோடி

கார்கிலில் பாகிஸ்தானின் துரோகத்தை இந்தியா தோற்கடித்தது என்று பிரதமர் மோடி பேசினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

காஷ்மீர் எல்லையில் உள்ள கார்கில் பகுதியை, கடந்த 1999ஆம் ஆண்டு பாகிஸ்தான் படையினர் ஆக்கிரமித்தனர். அப்போது பாகிஸ்தான் துருப்புகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி, விரட்டியடித்தது.

இந்த போரின்போது வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 26 ஆம் தேதி கார்கில் போர் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக தலைநகர் புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் கார்கில் வெற்றி தின விழா கொண்டாடப்பட்டது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார். மேலும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் ராணுவ வீரர்களின் வீரநடை மற்றும் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:- இந்தியாவின் பாதுகாப்பு யாராலும் வெல்ல முடியாத வகையில் உள்ளது. இது அப்படியே தொடரும். தேசிய பாதுகாப்பு என வரும் போது நாங்கள் எந்த அழுத்தத்திற்கும் இடம் கொடுக்க மாட்டோம். இந்தியாவின் உறுதி, திறன் மற்றும் வலிமைக்கு அடையாளமாக கார்கில் வெற்றி திகழ்கிறது. ஒட்டு மொத்த நாட்டையும் ஊக்குவிப்பதாய் கார்கில் போர் வெற்றி இன்னமும் திகழ்கிறது. கார்கில் வெற்றி ஒவ்வொரு இந்தியனுக்குமானது.

பயங்கரவாதம் ஒட்டு மொத்த மனிதகுலத்துக்கே எதிரானதாக உள்ளது. தற்போது விண்வெளியையும் போர் எட்டியுள்ளது. இணையதளத்திலும் போர் நடைபெறுகிறது. எனவே பாதுகாப்புத்துறையை நவீனமயமாக்குவது அவசியமானது.

பயங்கரவாதத்தால் ஒட்டு மொத்த உலகமும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. சில நாடுகள் மறைமுக போரில் ஈடுபடுகிறது. பயங்கரவாதத்தை பரப்பி வருகிறது. கார்கில் போரின் போது இந்தியாவின் எல்லையை மாற்றி வரையை பாகிஸ்தான் முயன்றது. ஆனால், நாம் அதை அனுமதிக்கவில்லை. கார்கிலில் பாகிஸ்தானின் துரோகத்தை இந்தியா தோற்கடித்தது இவ்வாறு அவர் பேசினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு