புதுடெல்லி,
டெல்லியில் சுவாமி சக்ரபாணி என்பவர் தன்னை அகில பாரத இந்து மகாசபை தலைவர் என்று கூறிக்கொண்டு, தனது அலுவலகத்தில் மக்களுக்கு கோமியம் (பசுவின் சிறுநீர்) வழங்கிக்கொண்டிருந்தார். இதை குடிப்பதால் கொரோனா வைரஸ் தாக்காது, தாக்கியிருந்தால் குணமாகும் என்று கூறப்பட்டது.
இதுபற்றி சுவாமி சக்ரபாணி கூறும்போது, மிருகங்களை கொன்று இறைச்சியை சாப்பிடுபவர்களை கொரோனா வைரஸ் தாக்குகிறது. கொரோனா ஒரு அவதாரம், இறைச்சி சாப்பிடுபவர்களை பழிவாங்க வருகிறது. பசுவின் சிறுநீர் மட்டுமே இதனை குணமாக்கும் மருந்து. இது அமுதம், கடவுள் கொடுத்த பரிசு. அனைவரும் இதனை தினமும் குடிக்கலாம். இந்திய பசுக்களில் மட்டுமே கிடைக்கும் இதனை உலக தலைவர்கள் குடிக்க வேண்டும். உங்கள் விஞ்ஞானிகளுக்கு கொரோனா வைரஸ் நோயை எப்படி குணப்படுத்துவது என தெரியவில்லை. ஆனால் எங்களுக்கு குணப்படுத்தும் மருந்தை கடவுள் கொடுத்திருக்கிறார் என்றார்.
ஆனால் மத்திய மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை மந்திரி கிரிராஜ்சிங், பொய்யான வதந்திகளை யாரும் நம்பவேண்டாம், கொரோனா வைரஸ் தாக்குதல் இறைச்சி, மீன், முட்டை சாப்பிடுவதால் வராது என்று கூறியுள்ளார்.