கொல்கத்தா,
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறி ஒடிசாவின் பாலசோர் அருகே பாரதீப் மற்றும் சாகர் தீவுக்கு இடையே இன்று மதியம் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. யாஸ் என பெயரிடப்பட்டு உள்ள இந்த புயலால் மணிக்கு 165 கி.மீ. முதல் 185 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும்.
புயல் தாக்கத்தால் மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதுபற்றி முதல் மந்திரி மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, யாஸ் புயலை முன்னிட்டு, பாதிப்புக்கான சாத்தியம் அதிகமுள்ள பகுதிகளில் இருந்து 11.5 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
பலத்த காற்று வீச்சால், ஹலிசஹாரில் 40 வீடுகள் சேதமடைந்து உள்ளன. 5 பேருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. சுசுரா பகுதியில் 40 வீடுகள் சேதமடைந்து உள்ளன. 2 பேர் பந்துவா பகுதியில் மின்னல் தாக்கி உயிரிழந்து உள்ளனர் என கூறியுள்ளார். புயலால் நேற்று மாலை பல பகுதிகளில் வீடுகள் மற்றும் மின் கம்பங்கள் சேதமடைந்து உள்ளன. மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.
அரசின் பல்வேறு துறையை சேர்ந்த 74 ஆயிரம் பணியாளர்கள் நிவாரண பணிக்காக முழு வீச்சில் களமிறக்கப்பட்டு உள்ளனர். வெளியேற்றப்பட்ட மக்கள் 8 ஆயிரம் வெள்ள நிவாரண முகாம்கள் மற்றும் பள்ளி கூடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.