தேசிய செய்திகள்

ஒடிசாவில் ‘யாஸ்’ புயல் கரையை கடந்தது; மேற்கு வங்காளத்தில் 1 கோடி பேர் பாதிப்பு; 3 லட்சம் வீடுகள் சேதம்; 21 லட்சம் பேர் வெளியேற்றம்; மீட்புப்பணியில் ராணுவம்

ஒடிசா கடலோர பகுதியில் ‘யாஸ்’ புயல் கரையை கடந்தது. மேற்கு வங்காளத்தில் 1 கோடி பேர் புயலால் பாதிக்கப்பட்டதாகவும், 3 லட்சம் வீடுகள் சேதமடைந்ததாகவும் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்தார். 2 மாநிலங்களிலும் 21 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

தினத்தந்தி

கரையை கடந்தது

வங்க கடலில் சில நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது. யாஸ் என்று பெயரிடப்பட்ட அந்த புயல், மிக தீவிர புயலாக நேற்று முன்தினம் உருவெடுத்தது. வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் மணிக்கு 17 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது.இந்த நிலையில், நேற்று காலை 9.15 மணிக்கு ஒடிசா மாநிலம் பாத்ரக் மாவட்டம் தாம்ரா துறைமுகத்தின் வடபகுதியில் புயல் கரையை கடக்கத்தொடங்கியது. புயலின் கண் பகுதி கரையை கடந்தபோது, மணிக்கு 130 கி.மீ. முதல் 145 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது.கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. 2 மீட்டர் முதல் 3 மீட்டர் உயரத்துக்கு அலை எழும்பியது. அத்துடன் பலத்த மழை கொட்டித்தீர்த்தது.

வெளியேற்றம்

பாலசோர், பாத்ரக் ஆகிய மாவட்டங்களின் கடலோர கிராமங்களில் கடல் நீர் புகுந்தது. கனமழை காரணமாக, புதாபலாங் ஆற்றில் நீர்மட்டம் 21 மீட்டர் அளவுக்கு உயர்ந்தது. அதன் அபாய அளவு 27 மீட்டர் ஆகும்.எனவே, ஆற்றின் இரு கரையோரங்களிலும் வசிக்கும் மக்களை மயூர்பஞ்ச் மாவட்ட நிர்வாகம் அப்புறப்படுத்தியது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் வெளியேற்றப்பட்டனர். மொத்தம் 5 லட்சத்து 80 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.ஜகத்சிங்பூர், கேந்திரபாரா, ஜஜ்பூர் ஆகிய மாவட்டங்களில் மின்ஒயர்கள் துண்டிக்கப்பட்டன. அதை சரிசெய்யும் பணி நடந்து வருகிறது. கெனோஜர் மாவட்டத்தில் மரம் விழுந்து அமுக்கியதால் ஒருவர் பலியானார். பாலசோர் மாவட்டத்தில் மரம் விழுந்ததில் ஒருவர் காயமடைந்தார்.பகல் 1.30 மணியளவில் புயல் முற்றிலும் கரையை கடந்து முடிந்தது. அதையடுத்து, வலுவிழந்த யாஸ் புயல், ஜார்கண்ட் மாநிலத்தை நோக்கி நகர்ந்தது.

மேற்கு வங்காளம்

யாஸ் புயல் கரையை கடந்தபோது, மேற்கு வங்காளத்தின் கடலோர மாவட்டங்களான கிழக்கு மிட்னாப்பூர், தெற்கு 24 பர்கானாஸ் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டன. கடலோர நகரான திகா முற்றிலும் தண்ணீரில் மூழ்கியது.கடலோர சொகுசு விடுதிகளில் தண்ணீர் புகுந்தது. அங்கிருந்த தென்னை மரங்களின் உயரத்துக்கு அலை எழும்பியது. கடலோரத்தில் இருந்த மண் குடிசைகள் அடித்துச் செல்லப்பட்டன.முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, நேற்று முன்தினம் இரவு முழுவதும் தலைமை செயலகத்தில் தங்கி இருந்து நிலைமையை கண்காணித்தார். 20 மாவட்ட கலெக்டர்களை தொடர்பு கொண்டு

பேசினா.

1 கோடி பேர் பாதிப்பு

புயல் பாதிப்பு குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

யாஸ் புயலால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலம் மேற்கு வங்காளம்தான். 1 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில், 3 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன. 15 லட்சம் பேர் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். புயலில் மீட்கப்பட்ட ஒருவர், தற்செயலாக இறந்து விட்டார்.பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ராணுவத்தின் 17 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அத்துடன், தேசிய பேரிடர் மீட்புப்படை, மாநில பேரிடர் மீட்புப்படை ஆகியவற்றின் வீரர்களும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ரூ.10 கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.72 மணி நேரத்துக்கு பிறகு, புயல் சேதம் குறித்து இறுதி மதிப்பீடு செய்யப்படும். நாங்கள் சொல்லும் வரை, நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்கள், தங்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விமான நிலையம் மூடப்பட்டது

மேற்கு வங்காளத்தில், பலத்த மழை காரணமாக, பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கங்கையிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஹூக்ளி அருகே உள்ள சாகர் தீவு வெள்ளத்தில் மூழ்கியது. பல இடங்களில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட படகுகள் அடித்துச் செல்லப்பட்டன. கொல்கத்தா விமான நிலையம் நேற்று இரவு 7.45 மணி வரை தற்காலிகமாக மூடப்பட்டது. விமானங்கள் புறப்படவோ, தரை இறங்கவோ அனுமதிக்கப்படவில்லை. இதுபோல், கிழக்கு ரெயில்வே நிர்வாகம், அனைத்து ரெயில்களையும் ரத்து செய்தது.ஒடிசா, மேற்கு வங்காளம் ஆகிய இரு மாநிலங்களிலும் மொத்தம் 113 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டன. கீழே விழுந்து கிடந்த மின்கம்பங்கள் மற்றும் மரங்களை அப்புறப்படுத்தி சாலை போக்குவரத்தை சீர்செய்து வருவதாக அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அதுபோல், வெள்ளத்தில் தவித்த குழந்தை உள்பட ஏராளமானோரை பத்திரமாக மீட்டதாகவும் அவர் கூறினார்.

4 பேர் பலி

மேற்கு வங்காளத்தில் சுற்றுலா நகரங்களான மண்டார்மனி, தாஜ்பூர், சங்கர்பூர் ஆகியவையும் வெள்ளத்தில் மிதக்கின்றன. சங்கர்பூரில் ஒரு பள்ளிக்கூடம் பேரலையால் அடித்துச்செல்லப்பட்டது.புயலுக்கு ஒடிசாவில் 3 பேரும், மேற்கு வங்காளத்தில் ஒருவரும் பலியானார்கள்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு