திருவனந்தபுரம்,
கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா, திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவிலில் வழிபடுவதற்காக நேற்று இரவு பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு விமானம் மூலம் வருகை தந்தார். விமான நிலையத்தில், எடியூரப்பாவுக்கு கேரள இளைஞர் காங்கிரசார் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
கர்நாடக மாநிலம் மங்களூருவில் நடைபெற்ற வன்முறை தொடர்பான செய்திகளை சேகரிக்கச் சென்ற கேரள பத்திரிகையாளர்கள் 7 பேர் அம்மாநில போலீசாரால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், எடியூரப்பாவுக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டி இளைஞர் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கறுப்புக்கொடி காட்டிய காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.