புதுடெல்லி,
ரெயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து, குறிப்பாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகள் புகைப்படம் ஒட்டிய அடையாள சான்று ஒன்றை பயணத்தின் போது தங்களுடன் வைத்திருக்க வேண்டும்.
இதற்காக ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மாணவர்களுக்கு பள்ளிகளில் வழங்கப்படும் அடையாள அட்டை, பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கும் அடையாள அட்டை, மத்தியமாநில அரசுகள் வழங்கும் புகைப்படம் ஒட்டிய பிற அடையாள சான்று என 11 வகையான ஆவணங்களை ரெயில்வே துறை ஏற்கனவே வெளியிட்டு இருந்தது.
இந்த நிலையில் இந்தியா முழுவதும் பார் கவுன்சில்களில் வக்கீல்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டைகளும் சரியான ஆதாரம்தான் என வழக்கு ஒன்றில் கேரள ஐகோர்ட்டு சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதை பரிசீலித்து ஏற்றுக்கொண்டுள்ள ரெயில்வே துறை, ரெயில் பயணத்தின் போது மேற்படி பார் கவுன்சில் அடையாள அட்டைகளையும் அடையாள சான்றாக பயன்படுத்தலாம் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.