புதுடெல்லி,
பீகார் சட்டசபை தேர்தல் நெருங்குவதையொட்டி, அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடந்தது.இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. கடந்த மாதம் 1-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 65 லட்சம்பேரின் பெயர்கள் விடுபட்டிருந்தன.
பெயர் சேர்ப்பு, நீக்கம் குறித்து மனு அளிப்பதற்கு செப்டம்பர் 1-ந் தேதிவரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. அந்த காலக்கெடு நேற்று முடிவடைந்தது.
இதற்கிடயே, இந்த காலக்கெடுவை நீட்டிக்கக்கோரி, ராஷ்டிரீய ஜனதாதளம், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி ஆகியவை சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தன.
இந்த மனு, நீதிபதிகள் சூர்ய காந்த், ஜாய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராகேஷ் திவிவேதி கூறியதாவது:-
செப்டம்பர் 1-ந் தேதி காலக்கெடுவை நீட்டிக்க முடியாது. அப்படி நீட்டிப்பது ஒட்டுமொத்த பணியையும், இறுதி வாக்காளர் பட்டியலை இறுதி செய்வதையும் சீர்குலைப்பதாக அமைந்து விடும்.இந்த காலக்கெடு முடிந்த பிறகும், பெயர் சேர்ப்பு மற்றும் நீக்கத்துக்கு விண்ணப்பங்களை அளிக்கலாம். ஆனால் அப்படி அளிக்கப்படும் மனுக்கள், வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பிறகுதான் பரிசீலிக்கப்படும்.
வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 99.5 சதவீத வாக்காளர்கள் தங்களது தகுதிக்கான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர். ராஷ்டிரீய ஜனதாதளம் 36 மனுக்களை அளித்ததாக கூறியுள்ளது. ஆனால், உண்மையில் 10 மனுக்கள்தான் அளித்தது. அவை ஏற்றுக்கொள்ளப்பட்டன.
யாருடைய ஆவணங்கள் அரைகுறையாக இருக்கின்றனவோ, அவர்களுக்கு 7 நாட்களுக்குள் நோட்டீஸ் அனுப்பப்படும். சிறப்பு தீவிர திருத்தப்பணி என்பது ஒரு தொடர்ச்சியான பணி. அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்ட பெரும்பாலான மனுக்கள், பெயர் சேர்ப்புக்கானவை அல்ல, பெயர் நீக்கம் செய்வதற்கான மனுக்கள். இவ்வாறு அவர் கூறினார்.
ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் வேட்புமனு தாக்கலுக்கு கடைசிநாள் வரை பெயர் சேர்ப்பு, நீக்கம் தொடர்பான மனுக்களை அளிக்கலாம் என்று தேர்தல் கமிஷன் கூறியதை நீதிபதிகள் குறித்துக் கொண்டனர்.பெயர் சேர்ப்பு, நீக்கம் தொடர்பான மனுக்களை அளிக்க தனிநபர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் உதவ தன்னார்வலர்களை நியமிக்குமாறு மாநில சட்டப்பணிகள் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அந்த தன்னார்வலர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட நீதிபதிகளிடம் ரகசிய அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அவை 8-ந் தேதி பரிசீலிக்கப்படும் என்றும் நீதிபதிகள் கூறினர்..