தேசிய செய்திகள்

எதிர்க்கட்சிகள் தரம் தாழ்ந்து செயல்படுகின்றன; பிரதமர் மோடி குற்றச்சாட்டு

மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

புதுடெல்லி,

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் நேற்று உரையாற்ற இருந்த நிலையில், அதற்கு முன்பாக அவையில் ஏற்பட்ட அமளி காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, பிரதமர் மோடி பதிலுரை இன்றி மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிரதமர் மோடி அவைக்கு வர பயந்துவிட்டார் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்த நிலையில், இது குறித்து பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமரின் உரையின்போது காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி எம்பிக்கள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்யலாம் என்று தனக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்ததாக தெரிவித்தார்.

“வரலாற்று ரீதியாக அரசியல் கருத்து வேறுபாடுகள் நாடாளுமன்ற அவைக்குள் கொண்டுவரப்பட்டதில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில எம்பிக்கள் பிரதமரின் இருக்கைக்குச் சென்று எதிர்பாராத ஒரு சம்பவத்தை நிகழ்த்தக்கூடும் என நம்பகமான தகவல் கிடைத்தது. அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால், அது தேசத்தின் கண்ணியத்துக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கும். அதனால்தான் நாடாளுமன்றத்துக்கு வர வேண்டாம் என பிரதமரை நான் கேட்டுக்கொண்டேன். நேற்று நடந்தது நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு கரும்புள்ளி” என்று ஓம் பிர்லா தெரிவித்திருந்தார்.

Also read:ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் - பிரதமர் மோடி பதிலுரை இன்றி மக்களவையில் நிறைவேற்றம்

சபாநாயகரின் இந்த குற்றச்சாட்டு அபத்தமானது என்று காங்கிரஸ் எம்பிக்கள் குற்றம் சாட்டினர்.

இந்த பரபரப்புக்கு இடையே மாநிலங்களவையில் பிரதமர் மோடி இன்று உரையாற்றி வருகிறார். பிரதமர் மோடி பேச ஆரம்பிக்கும் போது எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். எனினும், பிரதமர் மோடி தனது பேச்சை தொடர்ந்தார்.

Also read:மத்திய மந்திரி - ராகுல் காந்தி நேருக்கு நேர் வாக்குவாதம்: துரோகி, எதிரி என விமர்சித்ததால் பரபரப்பு

பிரதமர் மோடி பேசுகையில், “உலக நாடுகளின் பிரச்சினைகளை தீர்க்க இந்தியா வலிமைமிக்க நாடாக மாறி வருகிறது. இந்த நூற்றாண்டின் இரண்டாவது காலாண்டு இந்தியாவுடையதாக இருக்கும். வளர்ந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் கடந்த ஆண்டுகள் மைல் கற்களாக அமைந்துள்ளன. வளர்ந்த நாடுகளில் வயதானோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உலக பொருளாதாரத்தில் 2014-ல் 11-ஆம் இடத்தில் இருந்தோம்; இன்று 3-வது இடத்தில் உள்ளோம். எதிர்க்கட்சிகள் தரம் தாழ்ந்து செயல்படுகின்றன. எனது ஆட்சியில் வளர்ச்சி கண்கூடாக தெரிகிறது.

பொதுத்துறை நிறுவனங்கள் தற்போது லாபத்தில் இயங்கி வருகின்றன. சிறு விவசாயிகள் பற்றி முந்தைய அரசு கவலைப்பட்டது இல்லை. நமது இளைஞர்களின் உரிமைகளை பழங்குடியினர் பறித்துக்கொள்கிறார்கள்” இவ்வாறு அவர் பேசி வருகிறார்.