தேசிய செய்திகள்

காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம்.. 84 இடங்களில் கத்திக்குத்து - சகோதரியை கொடூரமாக கொன்ற இளைஞர்

கொலை செய்யப்பட்ட ஹிமான்ஷிகாவின் இதயம், நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகள் சேதமடைந்து, விலா எலும்புகள் முறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் மொரதாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹர்திக்(வயது 25). இவரது இரட்டை சகோதரி ஹிமான்ஷிகா(வயது 25). இவர்கள் இருவரும் குருகிராம் பகுதியில் தங்கியிருந்து ஒரே நிறுவனத்தில் பொறியாளர்களாக பணியாற்றி வந்தனர். இதில் ஹிமான்ஷிகா, வேலை செய்து கொண்டே எம்.பி.ஏ. படித்து வந்துள்ளார்.

இதற்கிடையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு ஹர்திக் திடீரென தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார். அதோடு அவர் சமூக வலைதளத்தில் அதிகமாக நேரம் செலவிட்டு வந்துள்ளார். இது குறித்து அவரது சகோதரி ஹிமான்ஷிகா கேட்டபோது, தனக்கு சமூக வலைதளம் மூலம் புனேவை சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியதாகவும், அந்த பெண்ணையே திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும் ஹர்திக் கூறியுள்ளார்.

இதனால் அதிரச்சியடைந்த ஹிமான்ஷிகா, இது குறித்து தனது தாய் நீலிமாவிடம் கூறியுள்ளார். ஹர்திக்கின் காதலுக்கு அவரது தாயும், சகோதரியும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலுடன் இருந்து வந்துள்ளார். இந்த சூழலில், சமீபத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாட ஹர்திக் மற்றும் ஹிமான்ஷிகா ஆகிய இருவரும் தங்கள் சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.

இவர்களின் தாய் நீலிமா ஒரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் துணை மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை, ஹர்திக்கும் ஹிமான்ஷிகாவும் வீட்டில் இருந்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஹிமான்ஷிகா தனது சகோதரன் ஹர்திக்கிடம், காதலை கைவிட்டு வேலையில் கவனம் செலுத்துமாறு அறிவுரை கூறியுள்ளார்.

அப்போது ஆத்திரமடைந்த ஹர்திக், வீட்டின் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து தனது சகோதரி ஹிமான்ஷிகா மீது சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஹிமான்ஷிகா, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். சகோதரியை கொலை செய்த ஹர்திக், எதுவும் நடக்காதது போல், தனது தாயை அழைத்து வருவதற்காக அவர் வேலை செய்யும் நிறுவனத்திற்கு காரை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார்.

அங்கு சென்று தனது தாய் நீலிமாவிடம், ‘வீட்டிற்கு வாருங்கள், உங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது’ என்று ஹர்திக் கூறியுள்ளார். இதன்படி இருவரும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, தனது மகள் ஹிமான்ஷிகா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பத்தைப் பார்த்து நீலிமா கதறி அழுதுள்ளார். அப்போது ஹர்திக், தனது தாய் நீலிமா மீதும் கத்திக்குத்து தாக்குதல் நடத்தி அவரை கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த நீலிமா மயக்கமடைந்து சரிந்து விழுந்தார். இதையடுத்து ஹர்திக் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது நீலிமா படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மறுபுறம், ஹிமான்ஷிகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். அவரது உடலில் 84 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது கழுத்து, மார்பு, வயிறு, கைகள், கால்கள், முகம் என உடலின் அனைத்து பாகங்களிலும் கத்திக்குத்து காயங்கள் உள்ளன. மேலும் இதயம், கல்லீரல், நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், விலா எலும்புகள் முறிந்து போகும் அளவிற்கு ஹிமான்ஷிகா மிக கொடூரமான முறையில் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொலையை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த ஹர்திக்கை போலீசார் 24 மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, சகோதரியை கொலை செய்த பிறகு போலீசார் எப்படியும் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்பதால், தனது தாய் தனியாக கஷ்டப்படக் கூடாது என்பதற்காக அவரையும் கொலை செய்ய முடிவு செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த கொடூரமான கொலை சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.