புதுடெல்லி
நாட்டில் முன்பெல்லாம் ஒரு பொருளை வாங்க கடைக்கு செல்ல வேண்டும். ஆனால், ஆன்லைன் வர்த்தகம் வளர தொடங்கியதும் மக்கள் அதன் வழியே பொருட்களை ஆர்டர் செய்து வாங்கி விடுகின்றனர். சிறிய பொருளில் இருந்து பெரிய பொருள் வரை, லட்சக்கணக்கான மதிப்பிலான பொருட்களையும் கூட வாங்கும் வசதி உள்ளது.
இந்த நிலையில், லிங்க்டுஇன் போஸ்ட் என்ற சமூக ஊடகத்தில் பூஜா ஜோஷி என்பவர் பகிர்ந்துள்ள பதிவு வைரலாகி உள்ளது. அவர், ஆன்லைன் வழியே செக்ஸ் பொம்மை ஒன்றை ஆர்டர் செய்திருக்கிறார். அப்போது ஏற்பட்ட அனுபவங்களை வேதனையுடன் வெளியிட்டு உள்ளார்.
அவர் பகிர்ந்த செய்தியில், ஒரு பெண்ணாக எனக்கு கசப்பான அனுபவம் ஏற்பட்டது என்றே உணர்ந்தேன். பாலியல் சார்ந்த பொருள் ஒன்றை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தேன் என தெரிவித்து உள்ளார்.
அதனை டெலிவரி செய்ய வந்த நபர் என்னை உற்று பார்த்தார். இதனால், நான் என்னுடைய பார்சலை வாங்கி விட்டு உடனடியாக கதவை சாத்தி விட்டேன். உள்ளே வந்த பின்னர்தான், ஆர்டர் செய்த பார்சல் பிரிக்கப்பட்டு உள்ளது என கவனித்தேன்.
உடனே எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பும் வந்தது. அது வேறு யாருமல்ல. அந்த டெலிவரி நபர்தான். அவர், இந்த பொருட்களை எல்லாம் ஏன் பயன்படுத்துகிறீர்கள்? என கூறி விட்டு, அதெல்லாம் வேண்டாம். என்னை பயன்படுத்தி கொள்ளுங்கள். ஒரே மஜாவாக இருக்கும் என்று கூறினார் என தெரிவித்து உள்ளார்.
இதனை கேட்டதும் அந்த இளம்பெண் அதிர்ந்துள்ளார். உடனே உஷாரான அவர், இதுபற்றி உயரதிகாரிகளிடம் புகார் அளித்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால், பயந்து போன அந்நபர் மன்னிப்பு கோரியுள்ளார். தொலைபேசி இணைப்பையும் துண்டித்து விட்டார்.
எனினும், அந்த தருணத்தில் ஏற்பட்ட அச்சம் மற்றும் அத்துமீறல் ஆகியவை ஒரு மன்னிப்பு கேட்டதில் மறைந்து விடாது என அவர் பகிர்ந்து உள்ளார். இந்த நிலையில், அந்த பெண் ஆர்டர் செய்த ஆன்லைன் நிறுவனம் பூஜாவின் பெயரை குறிப்பிட்டு மன்னிப்பு கோரியுள்ளது. அந்த டெலிவரி நபரை பணியில் இருந்து நீக்கி விட்டோம் என்றும் அவரிடம் தெரிவித்து இருக்கிறது. இதனையும் அவர் பகிர்ந்து இருக்கிறார்.
அவருக்கு ஆதரவாக நெட்டிசன்கள் பலரும் விமர்சனங்களை வெளியிட்டு உள்ளனர். ஒரு பெண் பாலியல் சார்ந்த பொருளை ஆர்டர் செய்கிறார் என்பதற்காக, அவரை விமர்சிக்கவோ, பாலியல் ரீதியிலான பலனை பெறவோ, துன்புறுத்தவோ செய்யலாம் என்பதற்கான அழைப்பு அதுவல்ல என சயாள் என்பவர் தெரிவித்து உள்ளார். அனுஷா என்ற பெண், நீங்கள் சந்தித்தது ஒரு பயங்கர அனுபவம். அதற்காக நான் வருந்துகிறேன் என பதிவிட்டு உள்ளார்.