புதுடெல்லி,
மத்திய பிரதேச மாநிலம் போபால் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சாத்வி பிரக்யா சிங் தாகூர். பாஜகவை சேர்ந்த இவர் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்த நிலையில், சமீபத்தில் விமானத்தில் பயணிகளுடனும், விமான சிப்பந்திகளுடன் சாத்வி பிரக்யா சிங் தாகூர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி அவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியிலிருந்து போபால் செல்லும் தனியார் விமானத்தில் வந்த சாத்வி பிரக்யா சிங் தாகூர், தான் முன்பதிவு செய்த இருக்கை வழங்கப்படவில்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். இதனால், விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதாக பயணிகள் கோபம் அடைந்து, "நீங்கள் மக்கள் பிரதிநிதி. உங்கள் பணி, எங்களைத் தொந்தரவு செய்வதில்லை. உங்களுக்கு அசவுகரியமாக இருந்தால் அடுத்த விமானத்தில் வாருங்கள்" என்று ஆவேசத்துடன் கூறினார்கள்.
இதற்கு பதிலளித்த பாஜக எம்.பி. "முதல் வகுப்பும் இல்லை, வசதியும் இல்லை. பின்னர் ஏன் நான் பயணிக்க வேண்டும்" என தனது அதிருப்தியை வெளிப்படுத்துகிறார். சாத்வி பிரக்யா சிங் தாகூர் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.