புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சமீபத்தில் நடந்த போராட்டத்தில் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி எஸ்.ஆர்.தாராபுரி கைது செய்யப்பட்டார். லக்னோ இந்திரா நகரில் வசிக்கிற அவரது குடும்பத்தினரை சந்தித்து பேசுவதற்காக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று முன்தினம் சென்றார்.
போலீஸ் எதிர்ப்பை மீறி காரில் இருந்து அவர் இறங்கி சென்றபோது, பெண் காவலர்கள் தன்னை சூழ்ந்ததாகவும், அவர்களில் ஒருவர் தனது கழுத்தைப் பிடித்து நிறுத்தியதாகவும், மற்றொரு பெண் காவலர் தன்னை பிடித்து தள்ளியதாகவும் பிரியங்கா பரபரப்பு புகார் கூறினார்.
இந்த புகார்கள் போலீஸ் தரப்பில் மறுக்கப்படுகின்றன.
இந்த நிலையில் பிரியங்கா காந்தி தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பதவி விலக கோரியும் இளைஞர் காங்கிரசார் டெல்லியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முன்னதாக அவர்கள் தெற்கு டெல்லியில் சாணக்கியபுரி பகுதியில் உள்ள அசாம் பவனில் இருந்து உத்தரபிரதேச பவன் நோக்கி அணிவகுத்து செல்ல முயற்சித்தனர். அங்கே வந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் அங்கே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கிய இளைஞர் காங்கிரஸ் தலைவர் சீனிவாஸ் கூறுகையில், பிரியங்காவிடம் வெட்கக்கேடாக நடந்து கொண்டதற்காக உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உடனே பதவி விலக வேண்டும் என கூறினார்.
இளைஞர் காங்கிரஸ் ஊடக பொறுப்பாளர் அம்ரிஷ் ரஞ்சன் பாண்டே, உத்தரபிரதேச மாநில அரசு பலரை சிறைக்கு அனுப்பி உள்ளது. மூத்த தலைவர்களை போலீஸ் தாக்குகிறது. இதனால் மாநில அரசு பதவியில் தொடர்வதற்கான தார்மீக உரிமையை இழந்து விட்டது என சாடினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 35 ஆண் தொண்டர்களும், 2 பெண் தொண்டர்களும் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக டெல்லி போலீஸ் துணை கமிஷனர் ஐஸ் சிங்கால் கூறும்போது, போராட்டம் நடத்திய 35 ஆண்களும், 2 பெண்களும் கைது செய்யப்பட்டு அவர்கள் மந்திர்மார்க் மற்றும் கன்னாட் பிளேஸ் போலீஸ் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டு விட்டனர் என்று தெரிவித்தார்.
இதற்கிடையே உத்தரபிரதேச மாநில துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா, பிரியங்கா காந்தி நாடகமாடுகிறார், இது காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டுகளை பெற்றுத்தராது, காங்கிரசுக்கு இருக்கிற ஆதரவும் போய்விடும் என்று சாடினார்.