தேசிய செய்திகள்

ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா நியமனம்

ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த, கிடுகு ருத்ர ராஜு நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

தினத்தந்தி

ஐதராபாத்,

ஆந்திர மாநில முதல்-மந்திரியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமானவர் ஜெகன் மோகன் ரெட்டி. இவரது சகோதரி ஒய்.எஸ். சர்மிளா. இவர் ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியை தொடங்கி அதன் தலைவராக இருந்து வருகிறார்.

இவர் கடந்த 4ம் தேதி தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துக் கொண்டார். டெல்லி அலுவலகத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

வரவிருக்கும் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு, ஆந்திர மாநிலத்தில் சர்மிளாவிற்கு முக்கிய பதவி கொடுக்க காங்கிரஸ் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது.

இதற்கிடையே ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த, கிடுகு ருத்ர ராஜு நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பான கடிதத்தை கடந்த வாரம் அவர், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த கடிதத்தில் ராஜினாமாவுக்கான காரணம் எதையும் அவர் குறிப்பிடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா நியமிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் தலைவராக ஒய்.எஸ்.சர்மிளா ரெட்டியை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நியமித்துள்ளதாகவும், இது உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் தலைவராக இருந்து பதவியை ராஜினாமா செய்துள்ள கிடுகு ருத்ர ராஜு, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சிறப்பு அழைப்பாளராக நியமிக்கப்படுகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்