தேசிய செய்திகள்

மைசூருவிலும் போலீஸ் தீவிர கண்காணிப்பு

மைசூருவில் ஒரு வாரமாக ஷாரிக் தங்கியிருந்ததால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மைசூரு:-

மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு பயங்கரவாதி ஷாரிக் மைசூரு அருகே மேட்டுஹள்ளி பகுதியில் உள்ள லோகநாயகா நகரில் மோகன்குமார் என்பவரின் வீட்டில் ஒரு மாதமாக தங்கியிருந்து, அங்குள்ள செல்போன் பயிற்சி மையத்தில் பயிற்சிக்காக சேர்ந்துள்ளார். இதனால் மைசூருவில் தங்கியிருந்த போது ஷாரிக்கை அவரது கூட்டாளிகள் யாரும் சந்தித்தார்களா? , அவருக்கு யாரும் உதவினார்களா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மோகன்குமாரின் வீட்டின் பின்பகுதியில் இருந்த சிறிய அறையில் தான் ஷாரிக் தங்கியிருந்து குக்கர் வெடிகுண்டை தயாரித்துள்ளார். இதனால் அந்த வீட்டை போலீசார் மூடி சீல் வைத்து தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

தங்களது வீட்டு அருகிலேயே பயங்கரவாதி சத்தமில்லாமல் தங்கியிருந்து வெடிகுண்டை தயாரித்த சம்பவத்தை அறிந்ததால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியில் இருந்து வருகிறார்கள். இதைத்தொடர்ந்து மைசூருவில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். மேலும் வெளிமாவட்ட எல்லைகள், தமிழ்நாடு, கேரளா எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சந்தேக நபர்கள் யாராவது மைசூருவில் பதுங்கியிருக்கிறார்களா எனவும் தீவிரமாக துப்பு துலக்கி வருகிறார்கள். இரவு-பகல் என 24 மணி நேரமும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.