திருவாரூர்,
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே பழங்களத்தூர் கிராமத்தில் கடந்த 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. இதனால் வாக்குச்சாவடி அருகே பொதுமக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந் தனர்.
அப்போது அங்கு வந்த நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசேகர், கூட்டமாக நின்று கொண்டிருந்தவர்கள் உடனடியாக கலைந்து செல்லுமாறு கூறி தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் போலீசாரின் அத்து மீறல் நடவடிக்கையை கண்டித்து ஒளிமதி கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை தடியடி குறித்து உடனடியாக விசாரணை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து நீடாமங்கலம் இன்ஸ்பெக்டர் முனிசேகரை பணியில் இருந்து விடுவித்து காத்திருப்போர் பட்டியலில் வைக்க போலீஸ் சூப்பிரண்டு துரை உத்தரவிட்டார்.