செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடரும் ஜவாஹிருல்லா பேட்டி

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடரும் என திருவாரூரில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.

திருவாரூர்,

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய அமைப்பினர், அரசியல் கட்சியினர், மாணவர்கள் என பல தரப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். திருவாரூர் அருகே அடியக்கமங்கலத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா நேற்று கலந்து கொண்டார். அப்போது குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அரசிதழில் வெளியிட வேண்டும்

இந்தியா முழுவதும் தேசிய குடியுரிமை பதிவேட்டிற்கான கணக்கெடுப்பை நடத்துவதற்கு ரூ.70 ஆயிரம் கோடி தேவை. அவ்வளவு செலவு செய்து கணக்கெடுப்பை மோடி அரசு நடத்த போவது இல்லை. எனவே தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் அடிப்படையிலேயே தேசிய குடியுரிமை பதிவேடு தயாரிக்கப்படும் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெளிவாக கூறியுள்ளது. பீகார், கேரளா, புதுச்சேரி அரசுகள் அறிவித்ததைபோல தமிழக சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் தேசிய குடியுரிமை பதிவேடு கணக்கெடுப்பினை நடத்த மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றி அரசிதழில் வெளியிட வேண்டும். அதுவரை குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டம்

இதேபோல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். விவசாய சங்க நிர்வாகி வரதராஜன், த.மு.மு.க. மாவட்ட தலைவர் முஜிபுர்ரஹ்மான், எஸ்.டி.பி.ஜ. கட்சியின் மாவட்ட பேச்சாளர் நூர்முகமது, மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி ஆசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தில் நடந்த கலவரத்தை கண்டித்தும், இதற்கு பொறுப்பேற்று உள்துறை மந்திரி அமித்ஷா பதவி விலக கோரியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.

திருமக்கோட்டை

திருமக்கோட்டை கடைவீதியில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி முஸ்லிம் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு திருமக்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். தி.மு.க. மாவட்ட துணைச்செயலாளர் கலைவாணி, தி.மு.க ஊராட்சி செயலாளர் கோவிந்தராஜன், முஸ்லிம் லீக்கை சேர்ந்த முகமது உமர் பாரூக், சென்னை மே 17 இயக்கத்தை சேர்ந்த பிரவீன்குமார், மன்னார்குடி மாவட்ட தலைவர் காஜாமைதீன், மன்னார்குடி த.மு.மு.க. நகர தலைவர் முகமது காமில்நூரி ஆகியோர் பேசினர். இதில் இஸ்லாமிய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் அனைத்து கட்சியினர், வர்த்தக சங்கத்தினர் கலந்து கொண்டனர்.