திருச்சி,
திருச்சி பொன்மலையில் ரெயில்வே பணிமனை உள்ளது. இங்கு என்ஜின் பராமரிப்பு, புனரமைப்பு, வேகன்கள் தயாரிப்பு, ரெயில் பெட்டிகள் பராமரிப்பு, ரெயில் சக்கரங்கள் பழுதுபார்ப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பணிமனையில் 4 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். பணிமனையில் அலுவலக பணி நேரம் காலை 7 முதல் மாலை 4.30 மணி வரை ஆகும். இதில் மதிய உணவு இடைவேளை 45 நிமிடம் ஆகும். பணி காலை 7 மணிக்கு தொடங்கும் என்றாலும் அதற்கு முன்பாக காலை 6.45 மணி முதல் காலை 7 மணிக்குள் ஊழியர்கள் வரத்தொடங்கி விடுவார்கள்.
பணிமனைக்கு பணிக்கு வரும் ஊழியர்களின் வருகைப்பதிவு தற்போது கார்டு முறையில் உள்ளது. இந்த நிலையில் ஊழியர்களின் வருகைப்பதிவை மேற்கொள்ள தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பயோ-மெட்ரிக் முறையை அறிமுகப்படுத்த ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதுதொடர்பாக எஸ்.ஆர்.எம்.யு. உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகளுடன் தெற்கு ரெயில்வே தலைமை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
12-ந் தேதி முதல்...
இதையடுத்து பயோ-மெட்ரிக் கருவி பொருத்துவதற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்தன. இதனை சோதனை அடிப்படையில் இயக்கி பார்க்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் சோதனை அடிப்படையில் பயோ-மெட்ரிக் முறை பயன்படுத்தப்பட உள்ளது.
அதன்பின்னர் வருகிற 12-ந் தேதி முதல் முழுமையாக இந்த முறை அமல்படுத்தப்பட உள்ளதாக ரெயில்வே வட்டாரத்தில் தெரிவித்தனர். இனி ஊழியர்கள் பணிக்கு வந்து செல்லும்போது தங்களது பிரிவு அலுவலகங்களில் உள்ள பயோ-மெட்ரிக் கருவியில் விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் ஊழியர்கள் பணி நேரம் கணக்கிடப்பட்டு, கூடுதல் நேரம் பணியாற்றியிருந்தால் அதற்கான அலவென்சு தொகை கணக்கிட்டு கொடுக்க எளிதாக இருக்கும் என்று ரெயில்வே வட்டாரத்தில் தெரிவித்தனர். மேலும் ஊழியர்கள் வருகைப்பதிவு முறையாக கணினியில் பதிவேற்றம் செய்து கண்காணிக்கப்படும், என்றனர்.