நாகர்கோவில்,
நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடந்தது. மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் வாங்கினார். அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 853 பேர் மனு கொடுத்தனர்.
அவற்றை கலெக்டர் பெற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
நூற்றுக்கணக்கான மீனவர்கள்
கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில், பங்குதந்தைகள் ஆகியோர் தலைமையில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ குடும்பத்தினர், பிரதிநிதிகள், நூற்றுக்கணக்கான மீனவ மக்கள் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறி இருப்பதாவது:-
குமரி மாவட்டம் கடியப்பட்டணம், ஆரோக்கியபுரம், முட்டம், கன்னியாகுமரி, ராஜாக்கமங்கலம்துறை, பூத்துறை, தூத்தூர், குறும்பனை போன்ற பகுதிகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மீனவர்களும், நெல்லை, தூத்துக்குடி, நாகப்பட்டினம் மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மீனவர்களுமாக மொத்தம் 721 பேர் ஈரான் நாட்டில் கீஸ், சாரக், லாவன், புஷர், கங்கோன் உள்பட பல்வேறு பகுதிகளில் அரேபிய முதலாளிகளிடம் மீன்பிடி தொழில் செய்து வந்தனர்.
முதல்-அமைச்சருக்கு...
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது ஈரான் நாட்டிலும் பரவியுள்ளது. ஈரான் நாட்டில் மீன்பிடிக்கச் சென்ற நமது இந்திய மீனவர்களையும் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால் ஈரான் நாடு அங்குள்ள மீன்பிடித் துறைமுகங்களுக்கு சீல் வைத்துள்ளது. இதனால் மீனவர்கள் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வெளியேறவோ, கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மீன்பிடி துறைமுகங்களை சுற்றியுள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மீனவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரேபிய முதலாளிகளும் மீனவர்களுக்கு உரிய தேவைகளை பூர்த்தி செய்ய மாட்டோம் என்று கூறிவிட்டார்கள். எனவே மீனவர்கள் ஒருவேளை உணவுகூட கிடைக்காமல் பசியால் வாடுகின்றனர். குடிப்பதற்குகூட போதிய தண்ணீர் கிடைக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.
அவர்கள் தங்குவதற்கு அறைகள்கூட கொடுக்காததால், விசைப்படகிலேயே கடலுக்குள் தங்கியுள்ளனர். இந்திய மீனவர்களை கொரோனா வைரஸ் பாதித்தால் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும், மருத்துவ சிகிச்சை பெறவும் எந்த வாய்ப்பும் இல்லாத சூழலில் மீனவர்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். எனவே அனைத்து மீனவர்களையும் உடனடியாக விமானம் மூலம் மீட்டு தாயகம் சேர்க்க வேண்டுமென மத்திய வெளிவிவகாரத்துறை மந்திரிக்கும், தமிழக முதல்-அமைச்சருக்கும் குமரி மாவட்ட கலெக்டர் வழியாக இந்த மனுவை வழங்குகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சுகாதாரமான குடிநீர்
புத்தளம் பேரூராட்சி பொதுமக்கள் சார்பில் புத்தளம் பேரூர் காங்கிரஸ் தலைவர் ரெங்கன் தலைமையில், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் அசோக்ராஜ், முருகானந்தம், அந்தோணிமுத்து உள்பட பலர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
புத்தளம் பேரூராட்சி பகுதியில் உப்பு கலந்த சுகாதாரக்கேடு நிறைந்த குடிதண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரில் கலந்த உப்புத்தன்மையால் தண்ணீரை குடிப்பவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. எனவே தாங்கள் தகுந்த நடவடிக்கை எடுத்து சுகாதாரமான குடிதண்ணீரை பேரூராட்சி நிர்வாகம் வழியாக பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு
மணவாளக்குறிச்சி அருகே உள்ள ஆற்றின்கரை காலனி ஊர் தலைவர் ரவி, ஆற்றின்கரை ஊர் தலைவர் சாந்தகுமார் மற்றும் பலர் தனித்தனியாக நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
எங்களது கிராமம் மணவாளக்குறிச்சி பாலத்தில் இருந்து 50 அடி கிழக்கில் உள்ளது. இங்கு சுமார் 180 வீடுகள் உள்ளன. இங்கு புதிதாக அமைந்துள்ள டாஸ்மாக் கடையின் அருகில் பள்ளி, வழிபாட்டுத்தலங்கள், பஸ் நிறுத்தம் ஆகியவை உள்ளது. டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். எனவே அங்கிருந்து டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் விளவங்கோடு சட்டசபை தொகுதி செயலாளர் சரவணன் கொடுத்த மனுவில், மார்த்தாண்டம் வெட்டுமணி சந்திப்பில் செயல்பட்டு வரும் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பயன்பெறும் வகையில் எம்.ஆர்.ஐ., சி.டி. ஸ்கேன் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.