செய்திகள்

காஷ்மீரில் புல்வாமா போன்று மற்றொரு தாக்குதலுக்கு பாகிஸ்தான் திட்டம் -உளவுத்துறை தகவல்

காஷ்மீரில் புல்வாமா போன்று மற்றொரு தாக்குதலுக்கு பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது என உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர். பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றது. இதனையடுத்து இந்திய விமானப்படைகள் பாகிஸ்தானுக்குள் சென்று பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதலை நடத்தியது. இதனையடுத்து எல்லையில் பதற்றமான நிலை ஏற்பட்டது. இப்போது இந்திய அரசு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை பாகிஸ்தான் எதிர்க்கிறது.

காஷ்மீரி மக்களுக்கு தேவையானதை செய்வோம் என பாகிஸ்தான் ராணுவம் கூறியது. இவ்விவகாரத்தில் பாகிஸ்தான் உதவி கோரிய இடங்களில் எல்லாம் கதவுகள் மூடப்பட்டது. இதற்கிடையே பயங்கரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்தலாம் என இந்திய உளவுப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கடற்படை உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. எல்லையிலும் பாதுகாப்பு விஸ்தரிக்கப்பட்டது. இந்நிலையில் புல்வாமா தாக்குதலை போன்று மீண்டும் ஒரு தாக்குதலை நடத்த பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை தகவல் தெரிவிப்பதாக 'டிஎன்ஏ இந்தியா இணையதளம்' செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புக்கு பாகிஸ்தான் உளவுத்துறை தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. இப்போது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்த 6 முதல் 7 பயங்கரவாதிகள் எல்லைப்பகுதிக்குள் நுழைந்துவிட்டதாகவும், அவர்கள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்தி வெளியாகியது. சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவ தலைநகர் ராவல்பிண்டியில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு, ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் கமாண்டர் முப்தி அஸ்கர் ராப்புடன் ஆலோசனை நடத்தியுள்ளது.

ராணுவ உடையில் பயங்கரவாதிகள் இருக்க வேண்டும், அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற கவலைப்படாமல் இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சமீபத்தில் அந்நாட்டு பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில், காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்துவிட்டதால், காஷ்மீர் புல்வாமாவில் நடந்த தாக்குதலைப் போன்று மற்றொரு தாக்குதல் நடத்தக்கூடும் என்று எச்சரித்து இருந்தார். காஷ்மீர் மாநிலத்தில் உள்ள மக்கள் மீது அழுத்தம் அதிகரிப்பதால் இதுபோன்ற தாக்குதல்கள் நடக்கலாம். ஆனால் இந்த தாக்குதல் நடக்கும்போதெல்லாம் பாகிஸ்தான் ஆதரவு தருகிறது என்று கூறுகிறார்கள் என்றார்.

இம்மாத தொடக்கத்தில் பயங்கரவாதிகளை இந்திய எல்லைக்குள் அனுப்ப பாகிஸ்தான் ராணுவம் தொடர்ச்சியாக முயன்றது. இதுபோன்ற 4 முயற்சிகளை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. கெரான் செக்டாரில் பாகிஸ்தான் வீரர்கள், பயங்கரவாதிகள் என 7 பேரை சுட்டு வீழ்த்தியது. இதற்கிடையே பாதுகாப்பு படையின் கண்காணிப்பை மீறி எல்லையில் 5 பேர் கொண்ட ஜெய்ஷ் பயங்கரவாத குழு ஊடுருவியுள்ளது என தகவல் வெளியாகியது. இதனையடுத்து எல்லைப்பகுதியில் பாதுகாப்பு படைகள் உஷார் படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை