சென்னை,
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கியவர், ஜெ.தீபா. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் எனும் அடையாளத்துடன் அரசியல் களத்தில் இறங்கிய அவர், குறுகிய காலத்திலேயே பல சச்சரவுகளுக்கும், விமர்சனங்களுக்கும் ஆளானார். அவரது குடும்ப சண்டை வீதிக்கும் வந்தது.
கடந்த சில காலமாகவே அமைதியாக இருந்து வந்த ஜெ.தீபா திடீரென தனது பேரவையை அ.தி.மு.க.வுடன் இணைத்தார். இந்தநிலையில் அரசியலில் இருந்து முழுமையாக விலகுகிறேன் என்றும் அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தனது பேரவையை சிலர் தவறான பாதைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் புகார் கூறினார்.
கமிஷனருக்கு கோரிக்கை
இந்தநிலையில் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு கேட்டு அவர் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனிடம் வேண்டுகோள் விடுத்து உள்ளார். ஆடியோ மூலம் அவர் பேசியிருக்கும் அந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த ஆடியோ பதில் ஜெ.தீபா பேசியிருப்பதாவது:-
நான் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா. இந்த ஆடியோ மூலம் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். இதன்மூலமே எனது புகாரையும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க நினைக்கிறேன். நான் தொடங்கிய எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை 2 ஆண்டு காலமாக நடந்து வந்த ஒரு அரசியல் அமைப்பு.
அதை தாய் கழகமான அ.தி.மு.க.வில் இணைக்கும் தருவாயில் எனக்கு சில தொந்தரவுகள் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக அந்த பேரவையில் செயல்பட்டு வந்த சிலர், தேவையற்ற விதத்தில் எனக்கு தொந்தரவு அளித்து கொண்டிருக்கிறார்கள். இரவு, பகல் என்று பாராமல் போன் செய்தும், வாட்ஸ்-அப் மூலம் குரல் பதிவுகளையும் அனுப்பி தவறான முறையில் அதை பிரயோகப்படுத்தி கொண்டு, என்னை ஒரு பெண் என்று பாராமல் எல்லா விதத்திலும், 24 மணி நேரமும் எனக்கு தொல்லை கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
போலீஸ் பாதுகாப்பு தேவை
ஆகவே தார்மீக அடிப்படையில், ஒரு தனிநபராக அரசியலில் இருந்து முழுமையாக விலகி விட்ட சூழ்நிலையிலும், எனது உடல்நலத்தை கருத்தில் கொண்டும் காவல்துறை எனக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும். எனக்கும், என் கணவர் மாதவனுக்கு பாதுகாப்பு தேவை. எங்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
குறிப்பாக 6 பேர் சேர்ந்து என்னை தொடர்ச்சியாக துன்புறுத்தி வருகிறார்கள். வாட்ஸ்-அப்பில் குரல் பதிவுகள் அனுப்பி எனக்கு தொந்தரவுகள் கொடுக்கிறார்கள். அதனை சமூக வலைத்தளத்தில் பரவவிடுகிறார்கள். எங்களை தாக்கவும் செய்கிறார்கள். எந்நேரமும் எங்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. எனவே எனக்கும், என் கணவர் மாதவனுக்கும், தியாகராயநகர் சிவஞானம் தெருவில் உள்ள எனது இல்லத்துக்கும் பாதுகாப்பு வழங்கவேண்டும்.
நிம்மதியாக வாழ...
எனது உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் தொடர்ச்சியாக சிகிச்சை பெறும் நிலையில் இருக்கிறேன். இந்த நேரத்தில் அரசியலில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் அ.தி.மு.க. எனும் மாபெரும் மக்கள் சக்தி கொண்ட அமைப்பில் இந்த பேரவை இணைக்கப்பட்டதில் இருந்து, அதிருப்தியில் உள்ளவர்கள் சிலரின் தூண்டுதலின் பேரில் செயல்பட்டு, என்னை மிரட்டி தொந்தரவு செய்து வருகிறார்கள். நான் எனது வாழ்க்கையை நிம்மதியாக வாழ தேவையான பாதுகாப்பை போலீசார் வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த ஆடியோ பதிவில் பேசியுள்ளார்.