திருச்சி,
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே லலிதா ஜூவல்லரியில் கடந்த மாதம் 2-ந் தேதி அதிகாலை ரூ.13 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளைப்போனது. பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன் தலைமையிலான கும்பல் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.
இது தொடர்பாக கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தொடர்புடைய திருவாரூர் சீராத்தோப்பை சேர்ந்த மணிகண்டன், முருகனின் சகோதரி கனகவல்லி, மதுரையை சேர்ந்த கணேசன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபரான சுரேஷ், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். மேலும் பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன் பெங்களூரு கோர்ட்டில் சரண் அடைந்தான். பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட அவனை அங்குள்ள வழக்குகள் தொடர்பாக போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.
இதற்கிடையில் நகைக்கடை கொள்ளை வழக்கில் போலீஸ் காவலில் விசாரிக்க திருச்சி போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இது தொடர்பாக திருச்சி கோர்ட்டில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண் 1-ல் போலீசார் மனு தாக்கல் செய்தனர். மேலும் விசாரணைக்காக பெங்களூரு சிறையில் இருந்து அழைத்து வர கோர்ட்டில் வாரண்ட் பெற்று சென்றனர்.
பெங்களூரு கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்து திருவாரூர் முருகனை திருச்சி அழைத்து செல்ல அனுமதி கேட்டனர். ஆனால் கீழ் கோர்ட்டில் அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து, மேல்கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதில் திருவாரூர் முருகனை விசாரணைக்காக அழைத்து செல்ல நேற்று முன்தினம் அனுமதி கிடைத்தது. இதைத் தொடர்ந்து அவனை பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பெங்களூரு சிறையில் இருந்து இன்று (திங்கட்கிழமை) திருவாரூர் முருகனை போலீசார் அழைத்து வர உள்ளனர். நாளை (செவ்வாய்க் கிழமை) திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.
நகைக்கடையில் கொள்ளைப்போன 28 கிலோ தங்க நகை, ஒரு கிலோ வைர நகைகளில் இதுவரை 27 கிலோ 800 கிராமை போலீசார் மீட்டனர். மீதியுள்ள ஒரு கிலோ 200 கிராம் நகைகளை பறிமுதல் செய்ய திருவாரூர் முருகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர். காவல் விசாரணையில் மேலும் பல கொள்ளை சம்பவத்தில் அவனுக்கு தொடர்பு இருக்குமா? என்பது தெரியவரும் என போலீசார் கூறினர்.