செய்திகள்

‘வலி’ அறியாத பெண்மணி

ஸ்காட்லாந்தை சேர்ந்த ஜோ கேமரூன் என்ற பெண்மணி, ‘வலி’யை உணராத, வலி என்றாலே என்னவென்று தெரியாத பெண்ணாக இருக்கிறார்.

தினத்தந்தி

தோல் மீது நெருப்புப்பட்டால் கூட அது இவருக்குத் தெரிவதில்லை. அதிலிருந்து கிளம்பும் புகை வாசத்தில்தான் உணர்கிறார். ஜோ உள்பட உலகில் இரண்டே இரண்டு பேருக்குத்தான் இந்த விசித்திரப் பிரச்சினை இருக்கிறது. இதற்கு, மிகவும் அரிதான மரபணுப் பிறழ்வுதான் காரணம்.

ஜோவுக்கு 65 வயதிருக்கும்போது ஓர் அறுவை சிகிச்சை நடந்தது. அந்தச் சமயத்தில் அவருக்கு வலி நிவாரணியே தேவைப்படவில்லை என்பதைக் கண்டறிந்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தனக்கு இதுபோன்ற வித்தியாசமான மரபணு அமைப்பு உள்ளது என்பது ஜோவுக்கும் அதுவரை தெரியாது.

ஜோவின் கையில் செய்யப்பட்ட அறுவைசிகிச்சைக்குப் பிறகு, அவருக்கு அந்தப் பகுதியில் தொடர் வலி இருக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்தனர். ஆனால், சிறிதும் வலியை உணராத ஜோ, தனக்கு அறுவைசிகிச்சையின்போது மயக்க மருந்து அளித்த மருத்துவர் தேவ்ஜித் ஸ்ரீவஸ்தவாவை தொடர்பு கொண்டார். அவர், லண்டன் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களில் உள்ள மரபியல் ஆராய்ச்சியாளர்களைச் சந்திக்குமாறு அனுப்பி வைத்தார்.

பல கட்ட ஆய்வுகளுக்குப் பின்னர், ஜோவின் அசாதாரணமான உடல்நிலைக்கு அவரது மரபணுவில் ஏற்பட்டுள்ள பிறழ்வே காரணம் எனக் கண்டறியப்பட்டது. ஸ்காட்லாந்தில் உள்ள இன்வெர்ன்ஸ் நகரத்தைச் சேர்ந்த ஜோ, தனக்கு அறுவைசிகிச்சை நடந்தபிறகு அதற்குரிய வலி நிவாரணி மாத்திரைகளே தேவைப்படவில்லை என்று தான் மருத்துவர்களிடம் கூறியபோது அவர்கள் நம்பவே இல்லை என்று கூறுகிறார்.

என்னுடைய மருத்துவ சிகிச்சை வரலாற்றை ஆராய்ந்த மருத்துவர், இதுவரை நான் வலி நிவாரணிகளையே பயன்படுத்தவில்லை என்பதைக் கண்டறிந்தார். அதன் பிறகே, ஜோவை இங்கிலாந்தில் உள்ள சிறப்பு மருத்துவர்களை சென்று சந்திக்குமாறு அந்த மருத்துவர் கூறினார். அந்த சமயத்தில், தான் மிகவும் ஆரோக்கியமானவர் என்று மட்டும் நினைக்கவில்லை என்று கூறுகிறார் ஜோ.

என்னுடைய கடந்த கால நினைவுகளை மீட் டெடுக்கும்போது, நான் வலி நிவாரணிகளைப் பயன்படுத்தவே இல்லை என்பது தெரியவந்தது. நம்மை பற்றிய வித்தியாசமான ஒன்றை யாராவது ஒருவர் சுட்டிக்காட்டும்வரை அதுகுறித்து நமக்குத் தெரிவதில்லை.

பிரசவத்தின்போது கூட நான் சற்று வித்தியாசமாக உணர்ந்தேன், அவ்வளவுதான். அதைத் தவிர்த்து நான் வலியை உணரவில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நான் அந்தத் தருணத்தில் உற்சாகமாக இருந்தேன் என்று கூறித் திகைக்கச் செய்கிறார் ஜோ.

தனக்கு ஏற்பட்டுள்ள வித்தியாசமான உடல்நிலை தொடர்பாக சிகிச்சை ஒன்றும் பெற விரும்பாத ஜோ, ஒருவருக்கு வலி என்பது காரணத்தோடுதான் இருக்கிறது. நமது உடல் இயக்கத்தில் அசாதாரணமான செயல்பாடு இருக்கும்போது அது நம்மை எச்சரிக்கிறது என்று கூறுகிறார்.

மேலும், ஜோவால் மற்றவர்களைவிட விரைவிலேயே நோய்களில் இருந்து தீர்வு பெற முடியும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தக் குறிப்பிட்ட மரபணு பிறழ்வு, ஜோவுக்கு மறதியையும் ஏற்படுத்துகிறது. இதற்கு மகிழ்ச்சி மரபணு அல்லது மறதி மரபணு என்று பெயர். இதன் மூலம் எனது வாழ்க்கையின் பல எதிர்மறையான நினைவுகளை மறப்பதால், எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது. இது தங்களுக்கு எரிச்சலூட்டுவதாக என்னுடைய நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜோவின் கார் சமீபத்தில் ஒரு விபத்தில் சிக்கியது. அந்தச் சூழ்நிலையில் ஒருவருக்கு இயல்பாக ஏற்படும் அதிர்ச்சி, பயம், கோபம் உள்ளிட்ட எவ்வித உணர்வும் இன்றி அங்கிருந்து கடந்து சென்றார் ஜோ. எனக்கு அட்ரினலின் சுரப்பதில்லை. ஓர் அசாதாரணமான சூழ்நிலை குறித்து உடலும், மனதும் எச்சரிக்கை விடுப்பது மனிதர்களுக்கு அத்தியாவசியமானது. ஆனால், என்னால் அதை அனுபவிக்க முடியாதது வருந்தத்தக்கதுதான் என்கிறார் அவர்.

எங்களது கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும்போது ஏற்பட்ட அதிர்ச்சியின்போதும் அவர் அமைதியாக காணப்பட்டது எனக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று அந்த விபத்தில் சிக்கிய மற்றொருவர் கூறுகிறார். அறுவைசிகிச்சைகளின்போது, வலி நிவாரணிகளை அளித்தாலும், இரண்டில் ஒருவர் மிதமானது முதல் கடுமையான வலியை உணருகின்றனர். எனவே, எங்களது ஆராய்ச்சி முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு புதிய மருத்துவ முறைகளை மேம் படுத்த இயலுமா என்று யோசித்து வருகிறோம். அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய வலியை ஒவ்வோர் ஆண்டும் எதிர்கொள்ளும் 33 கோடி நோயாளிகளுக்கு இது மிகவும் உதவிகரமாக அமையும் என்று ஜோ கேமரூனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வலியையே அறியாது இருப்பது, சுகமல்ல, சோகம்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து