புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகளை நியமிப்பதற்கான பரிந்துரைகளை வழங்க 5 மூத்த நீதிபதிகளை கொண்ட கொலீஜியம் அமைக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் ஓய்வுபெற்றதால், நீதிபதி ஆர்.பானுமதி 5-வது மூத்த நீதிபதியானார். அதனைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியத்தில் அவர் தாமாகவே உறுப்பினராக சேர்க்கப்படுகிறார்.
இப்போது புதிய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, பாலிநாரிமன், பானுமதி ஆகியோர் இந்த கொலீஜியத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியத்தில் உறுப்பினராகும் 2-வது பெண் நீதிபதி பானுமதி. ருமாபால் என்ற பெண் நீதிபதி உறுப்பினராக நியமிக்கப்பட்டு 2006-ம் ஆண்டு ஓய்வுபெற்றார். 13 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போது நீதிபதி பானுமதி கொலீஜியம் உறுப்பினராகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தை சேர்ந்த நீதிபதி ஆர்.பானுமதி 1981-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்தார். 1988-ம் ஆண்டு தமிழகத்தில் மாவட்ட மற்றும் செசன்சு கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2003-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஆனார். 2013-ம் ஆண்டு ஜார்கண்ட் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாகவும், 2014-ம் ஆண்டு ஆகஸ்டு 13-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.