கழுகுமலை,
தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் வைகாசி விசாக திருவிழா ஆண்டு தோறும் வெகு சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழா நேற்று நடந்தது.
விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு பக்தர்கள் கிரிவலம் சென்று நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் மேல வாசலில் இருந்து புறப்பட்டு மேலரதவீதி, கீழரதவீதி, நாராயணசாமி கோவில் தெரு, அரண்மனை வாசல் தெரு, கீழ பஜார் வழியாக சென்றனர். வரும் வழியில் 50 அடி தூரத்துக்கு ஒரு முறை கீழே விழுந்து கும்பிடு நமஸ்காரம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து கிரிவல பாதை வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். பின்னர் சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. மாலை 6 மணிக்கு பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இரவில் அலங்கரிக்கப்பட்ட மயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். விழாவில் கழுகுமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.
கயத்தாறு திருநீலகண்ட ஈஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு முருகன், வள்ளி-தெய்வானை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. அதனை தொடர்ந்து சப்பரத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி கோவிலை சுற்றி வலம் வந்தனர். பின்னர் கயத்தாறில் 4 ரதவீதிகள் வழியாக சென்று பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. வீதிஉலாவின் போது வழிநெடுகிலும் பக்தர்கள் தேங்காய் உடைத்து வணங்கினர்.