புதுச்சேரி,
காமராஜரின் நினைவு நாள் புதுவை அரசு சார்பில் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி ராஜா தியேட்டர் சந்திப்பில் உள்ள அவரது சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
சிலைக்கு அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலும் காந்தி, காமராஜர் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பெத்தபெருமாள், துணை தலைவர்கள் நீல.கங்காதரன், பி.கே.தேவதாஸ், காங்கிரஸ் நிர்வாகிகள் ஏ.கே.டி.ஆறு முகம், தனுசு, ரகுமான், வீரமுத்து, பிரேமலதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
என்.ஆர்.காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் கட்சியின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி கலந்துகொண்டு காந்தி, காமராஜர் உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் டி.பி.ஆர்.செல்வம், அசோக் ஆனந்து, என்.எஸ்.ஜே.ஜெயபால், சுகுமாரன், கோபிகா, முன்னாள் சபாநாயகர் சபாபதி, முன்னாள் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், தியாகராஜன், என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாநில செயலாளர் வேல்முருகன் தலைமையில் காந்தி, காமராஜ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை செயலாளர் மூர்த்தி, துணைத்தலைவர் பாண்டுரங்கன், துணை செயலாளர் சுப்ரமணியன், பொருளாளர் இரிசப்பன், நகர செயலாளர் நாக.லோகநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
புதிய நீதிக்கட்சியினர் மாநில தலைவர் பொன்னுரங்கம் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, ராம.காமராஜ், தேவநாதன், முத்தையன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.