தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய தாலுகாக்களில் பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாக்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், உதவி கலெக்டர் சிவன்அருள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாக்களில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு இந்த 3 தாலுகாக்களை சேர்ந்த 1069 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழாக்களில் அவர் பேசியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் முதல்-அமைச்சர் உத்தரவுப்படி ரூ.24 கோடியே 83 லட்சம் மதிப்பில் 361 ஏரிகள், குளங்கள், குட்டைகளை தூர்வாரும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மழைநீரை முழுமையாக சேகரித்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் நோக்கம் நிறைவேறும். இதேபோல் பொதுப்பணித்துறையின் கீழ் 10 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு ரூ.4.97 கோடி மதிப்பில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தற்போது 50 சதவீதம் நிறைவடைந்து உள்ளன.
அரூர் சட்டமன்ற தொகுதியில் மாம்பட்டி, குமாரம்பட்டி ஆகிய பகுதிகளில் தடுப்பணை கட்ட ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. பெரமாண்டபட்டியில் ரூ.10.18 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அனுமந்தீர்த்தம்-பொய்யப்பட்டியில் ரூ.3.83 கோடி மதிப்பில் பாலத்தை அகலப்படுத்தும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற தமிழக அரசுக்கு பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சிகளில் தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், அரசு வக்கீல் பசுபதி, கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் விஸ்வநாதன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் கோபால், மாணிக்கம், குமார், கூட்டுறவு சங்க தலைவர்கள் செல்வராஜ், மதிவாணன், தாசில்தார்கள் கலைச்செல்வி, செல்வக்குமார், இளஞ்செழியன், உள்பட அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.