பெங்களூரு,
கர்நாடக சட்டசபைக்கு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது.
இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. 104 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றதால், எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாததால், எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார்.
அதைத்தொடர்ந்து காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. குமாரசாமி முதல்- மந்திரியாக பதவி ஏற்றார். 14 மாதங்கள் குமாரசாமி ஆட்சி செய்தார். 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது.
அதைத்தொடர்ந்து ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ. உள்பட 106 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை கொண்ட எடியூரப்பா கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் கர்நாடக சட்டசபையில் 17 இடங்கள் காலியாக இருந்தன. இதில் பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர், மஸ்கி ஆகிய 2 தொகுதிகளை தவிர மீதமுள்ள கே.ஆர்.புரம், மகாலட்சுமி லே-அவுட், சிவாஜிநகர், யஷ்வந்தபுரம், ஒசக்கோட்டை, கே.ஆர்.பேட்டை, உன்சூர், ராணிபென்னூர், இரேகெரூர், அதானி, கோகாக், காக்வாட், சிக்பள்ளாப்பூர், எல்லாப்பூர், விஜயநகர் ஆகிய 15 தொகுதிகளுக்கு டிசம்பர் 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் 165 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இதில் முக்கியமாக 1. கே.ஆர்.புரம் தொகுதியில் பா.ஜனதா சார்பில் பைரதி பசவராஜ், காங்கிரஸ் சார்பில் நாராயணசாமி, ஜனதா தளம்(எஸ்) சார்பில் கிருஷ்ணமூர்த்தி, 2. சிவாஜிநகரில் காங்கிரஸ் சார்பில் ரிஸ்வான் ஹர்ஷத், பா.ஜனதா சார்பில் எம்.சரவணா, ஜனதா தளம்(எஸ்) சார்பில் தன்வீர் அகமது உல்லா, 3. மகாலட்சுமி லே-அவுட்டில் பா.ஜனதா சார்பில் கோபாலய்யா, காங்கிரஸ் சார்பில் சிவராஜு, ஜனதா தளம்(எஸ்) சார்பில் கிரீஷ்நாசி, 4. யஷ்வந்தபுரத்தில் பா.ஜனதா சார்பில் எஸ்.டி.சோமசேகர், காங்கிரஸ் சார்பில் நாகராஜ், ஜனதா தளம்(எஸ்) சார்பில் ஜவராயிகவுடா போட்டியிட்டனர்.
5. கே.ஆர்.பேட்டையில் பா.ஜனதா சார்பில் நாராயணகவுடா, காங்கிரஸ் சார்பில் கே.பி.சந்திரசேகர், ஜனதா தளம்(எஸ்) சார்பில் பி.எல்.தேவராஜ், 6. உன்சூரில் பா.ஜனதா சார்பில் எச்.விஸ்வநாத், காங்கிரஸ் சார்பில் எச்.பி.மஞ்சுநாத், ஜனதா தளம்(எஸ்) சார்பில் சோமசேகர், 7. எல்லாப்பூரில் பா.ஜனதா சார்பில் சிவராம் ஹெப்பார், காங்கிரஸ் சார்பில் பீமண்ண நாயக், ஜனதா தளம்(எஸ்) சார்பில் சைத்ராகவுடா, 8. ராணிபென்னூரில் பா.ஜனதா சார்பில் அருண்குமார் புஜார், காங்கிரஸ் சார்பில் முன்னாள் சபாநாயகர்கே.பி. கோலிவாட், 9. இரேகெரூரில் பா.ஜனதா சார்பில் பி.சி.பட்டீல், காங்கிரஸ் சார்பில் பி.எச்.பன்னிகோட், 10. அதானியில் பா.ஜனதா சார்பில் மகேஷ் குமட்டள்ளி, காங்கிரஸ் சார்பில் ஜே.பி.மங்குசுலி ஆகியோர் போட்டியிட்டனர்.
11. காக்வாட்டில் பா.ஜனதா சார்பில் ஸ்ரீமந்த்பட்டீல், காங்கிரஸ் சார்பில் ராஜூ காகே, ஜனதா தளம்(எஸ்) சார்பில் ஸ்ரீசைல துகஷெட்டி, 12. கோகாக்கில் பா.ஜனதா சார்பில் ரமேஷ் ஜார்கிகோளி, காங்கிரஸ் சார்பில் லகன் ஜார்கிகோளி, ஜனதா தளம்(எஸ்) சார்பில் அசோக் பூஜாரி, 13. ஒசக்கோட்டையில் பா.ஜனதா சார்பில் எம்.டி.பி.நாகராஜ், காங்கிரஸ் சார்பில் பத்மாவதி சுரேஷ், சுயேச்சை வேட்பாளர் சரத் பச்சேகவுடா, 14. சிக்பள்ளாப்பூரில் பா.ஜனதா சார்பில் சுதாகர், காங்கிரஸ் சார்பில் எம்.ஆஞ்சனப்பா, ஜனதா தளம்(எஸ்) சார்பில் ராதாகிருஷ்ணா, 15. விஜயநகரில் பா.ஜனதா சார்பில் ஆனந்த்சிங், காங்கிரஸ் சார்பில் வி.ஒய்.கோர்படே, ஜனதா தளம்(எஸ்) சார்பில் என்.எம்.நபி ஆகியோர் போட்டியிட்டனர்.
கடந்த 5-ந் தேதி 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் சுமார் 70 சதவீத வாக்குகள் பதிவாயின. இந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கை நேற்று 11 மையங்களில் காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே பா.ஜனதா அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்று வந்தது. ஒரு கட்டத்தில் அக்கட்சி 12 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. இறுதியில் அக்கட்சி 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
பா.ஜனதா வேட்பாளர்கள் கே.ஆர்.புரத்தில் பைரதி பசவராஜ், யஷ்வந்தபுரத்தில் எஸ்.டி.சோமசேகர், மகாலட்சுமி லே-அவுட்டில் கோபாலய்யா, கே.ஆர்.பேட்டையில் நாராயணகவுடா, எல்லாப்பூரில் சிவராம் ஹெப்பார், இரேகெரூரில் பி.சி.பட்டீல், ராணிபென்னூரில் அருண்குமார் புஜார், விஜயநகரில் ஆனந்த்சிங், அதானியில் மகேஷ் குமடள்ளி, கோகாக்கில் ரமேஷ் ஜார்கிகோளி, காக்வாட்டில் ஸ்ரீமந்த்பட்டீல், சிக்பள்ளாப்பூரில் சுதாகர் ஆகியோர் வெற்றி பெற்றனர். பா.ஜனதா வேட்பாளர்கள் அனைவருமே அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பது, எதிர்க்கட்சி தலைவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சி உன்சூர், சிவாஜிநகர் ஆகிய 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகள் தவிர 10 தொகுதிகளை பா.ஜனதாவிடம் பறிகொடுத்துள்ளது. ஒசக்கோட்டையில் சுயேச்சை வேட்பாளர் சரத் பச்சேகவுடா வெற்றி பெற்றுள்ளார். அவர் பா.ஜனதாவை சேர்ந்த பச்சேகவுடா எம்.பி.யின் மகன் ஆவார். முன்னாள் பிரதமர் தேவேகவுடாவை தேசிய தலைவராக கொண்டுள்ள ஜனதா தளம்(எஸ்) கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அக்கட்சி தன்வசம் இருந்த 3 தொகுதிகளையும் பறிகொடுத்துவிட்டது. 12 தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம் பா.ஜனதா முழு பெரும்பான்மை பலத்தை அடைந்துள்ளது. இதன் மூலம் எடியூரப்பா அரசு சிக்கலில் இருந்து தப்பியது. எடியூரப்பா இனி அடுத்த 3 ஆண்டுகள் எந்த பிரச்சினையும் இன்றி ஆட்சி நடத்த முடியும்.
பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட 13 தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களில் 2 பேர் மட்டுமே தோல்வி அடைந்தனர். மீதமுள்ள 11 பேர் வெற்றி வாகை சூடியுள்ளனர். மண்டியா மாவட்டம் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் கோட்டை. அங்கு அக்கட்சிக்கு காங்கிரஸ் கட்சி மட்டுமே போட்டியாக இருப்பது வழக்கம். அந்த பகுதியில் பா.ஜனதாவுக்கு போதிய பலம் கிடையாது. ஆயினும் கே.ஆர்.பேட்டை தொகுதியில் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை பின்னுக்கு தள்ளி, பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. அதாவது பா.ஜனதா முதல் முறையாக மண்டியா மாவட்டத்தில் தனது கணக்கை தொடங்கி இருக்கிறது. கே.ஆர்.பேட்டை தாலுகாவில் தான் முதல்-மந்திரி எடியூரப்பா பிறந்த கிராமம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சிக்பள்ளாப்பூரிலும் பா.ஜனதா முதல் முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
12 தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம் கர்நாடக சட்டசபையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களின் பலம் 105-ல் இருந்து 117 ஆக உயர்ந்துள்ளது. காங்கிரசின் பலம் 66-ல் இருந்து 68 ஆக அதிகரித்துள்ளது. ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஏற்கனவே இருந்த நிலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் 34 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அதே நேரத்தில் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் பலம் 2 ஆக அதிகரித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒரு எம்.எல்.ஏ. உள்ளார். இன்னும் 2 இடங்கள் காலியாக உள்ளன.